மிக்ஜாம் புயல்.. சென்னைக்கு இவ்ளோ நெருக்கமா வருமாமே.. வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி
சென்னை: தொடர் மழை இனிமேல்தான் படிப்படியாக அதிகரிக்கும். புயலின் மையப்பகுதி கிட்டத்தட்ட 100- 150 கி.மீட்டர் வரைக்கும் வரலாம். புயல் 200 கி.மீட்டர் வரை பரவியிருக்கும். எனவே, சின்ன புள்ளி போல நினைக்கக் கூடாது என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் கரையை கடப்பதையொட்டி, டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மிக்ஜாம் புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து திங்கட்கிழமை 4-ஆம் தேதியன்று முற்பகல் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும் என்றும்,

இதன் பிறகு கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 5ஆம் தேதியன்று முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் - மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலாக கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் 8 மணிக்கு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் நாளை காலை 8 மணி வரை 12 மணி நேரத்திற்கு சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விட்டிருந்தது.
பாலச்சந்திரன் பேட்டி: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்று தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தொடர் மழை இனிமேல்தான் படிப்படியாக அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். இது தொடர்பாக பாலச்சந்திரன் கூறியதாவது:- மிக்ஜாம் புயல் தற்போது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இரவு மிக கனமழை பெய்யும்: இது வடக்கு வடமேற்கு திசையில் நகர தொடங்கியுள்ளது. நாளை பிற்பகல் வட தமிழகம் தெற்கு ஆந்திர கரை பகுதிகளில் நிலை கொள்ளும். பிறகு கரைக்கு இணையாக நகர்ந்து 5 ஆம் தேதி முற்பகல் நெல்லுருக்கும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையக் கடக்கும். இன்று இரவு மிக கனமழை இருக்கும். ஒரு சில இடங்களில் அதி கனமழை இருக்கும். மிக மெதுவாக நகர்ந்து கொண்டு இருக்கிறது.
நேற்றை விட நகர்வு வேகம் குறைவாக உள்ளது. நேற்று 18 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்தது. இன்று சராசரியாக 7 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. கடல் பகுதியில் உள்ளது. புயல் இன்னும் வலுப்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தரைக்காற்றின் வேகம் 50-60 கி.மீட்டர் வேகம் வரை சென்று இடையிடையே 60-70 கி.மீட்டர் வேகம் இடைவெளி விட்டு வரும் அதன்பிறகு படிப்படியாக குறையும்.
இனி தான் அதிகரிக்கும்: திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட ஆந்திராவை ஒட்டியுள்ள 4 மாவட்டங்களில் புயல் நகர நகர மழை தொடங்கும். சென்னையில் காற்றும் மழையும் தான் இருக்கும். பரவலான கனமழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் ஓரிரு பகுதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இப்போதில் இருந்து நாளை இரவு வரைக்கும் மழை பெய்துள்ளது.
தொடர் மழை இனிமேல் தான் படிப்படியாக அதிகரிக்கும். புயலின் மையப்பகுதி கிட்டத்தட்ட 100 - 150 கி.மீட்டர் வரைக்கும் வரலாம். புயல் 200 கி.மீட்டர் வரை பரவியிருக்கும். எனவே, சின்ன புள்ளி போல நினைக்கக் கூடாது. அதனால் தான் 250 கி.மீட்டர் தொலைவில் இருந்தால் கூட மழை வருகிறது.












Click it and Unblock the Notifications