வெள்ளத்தில் 23 ஐயப்ப பக்தர்கள்.. ஓடோடி உதவிய முஸ்லிம்கள்! சூடான சைவ விருந்தளித்து நெகிழ வைத்த தமுமுக
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய பயணிகளை கயிறு கட்டி மீட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் அவர்களுக்கு சைவ உணவு வழங்கி உதவியது மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்து உள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சியால் தென் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அதி கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பொழிந்தது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 96 செமீ அளவில் பெரு மழை பொழிந்தது. நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அருவிகள், நீர் நிலைகள், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கடந்த 2 நாட்களில் கொட்டித்தீர்த்த அதி கனமழையாலும் நீர் நிலைகளில் ஏற்பட்ட உடைப்பாலும் தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த காரணத்தால் ஏராளமான மக்கள் முகாம்களில் தஞ்சம் புகுந்து இருக்கிறார்கள். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தேசிய பேரிடர் மீட்புப் படை உதவியுடன் தமிழ்நாடு அரசு மீட்புப் படையினர், காவல்துறையினர், அரசியல் கட்சியினர், இஸ்லாமிய அமைப்பினர், தன்னார்வலர்கள் என பலர் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு 190 நடமாடும் மருத்துவ வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. வெள்ளம் காரணமாக பல இடங்களில் ரயில் தண்டவாளங்களே அடித்து செல்லப்பட்டன. செய்துங்கநல்லூர் - ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையங்களுக்கு இடையே 12 கிலோ மீட்டர் தூரம் ரயில் தண்டவாளத்தில் இருந்த சரளை கற்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட உள்ளன.
வெள்ளம் காரணமாக ஸ்ரீவைகுண்டம் தனித்தீவானது. ரயில் சேவை ரத்து செய்யப்படுவதற்கு முன்பாகவே கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி இரவு 8 மணிக்கு புறப்பட்ட திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிக்கொண்டது. அங்கு சுமார் 800 பயணிகள் இந்த வெள்ளம் காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிக் கொண்டனர். இவர்களில் 300 பேர் மாநில அரசு அதிகாரிகள் உதவியுடன் நேற்று முன்தினம் மீட்கப்பட்ட நிலையில், நேற்று மீதம் உள்ள பயணிகளும் மீட்கப்பட்டனர்.
இவர்களில் 23 ஐயப்ப பக்தர்களும் அடக்கம். சபரிமலை யாத்திரை செல்லும் 23 பேரையும் கயிறு கட்டி மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். அவர்களை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் மீட்டனர். வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டு வரும் தமுமுக பேரிடர் மீட்பு குழுவினர் ஐயப்ப பக்தர்களை நெல்லை மாவட்ட தமுமுக தலைவர் ரசூல் மைதீன் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று சைவ உணவு வழங்கி பத்திரமாக வழியனுப்பி வைத்தார்கள்.












Click it and Unblock the Notifications