ஹை அலர்ட்! கனமழை எச்சரிக்கை மாவட்டங்களுக்கு விரைந்தது பேரிடர் மீட்பு படை
சென்னை: வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, தற்போது புயலாக வலுப்பெற்றிருக்கிறது. இந்த புயல் நாளை புதுவையை ஒட்டிய பகுதியில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கக்கூடிய மாவட்டங்களுக்கு தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.
நவம்பர் மாதம் மத்தியில் தென்கிழக்கு வங்கக்கடலில், அதாவது அந்தமான் நிகோபர் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாகியிருந்தது. இது மெல்ல நகர்ந்து தமிழகத்தை வந்தடையும் என்று சொல்லப்பட்டிருந்தது. அதேபோல, தற்போது தமிழகத்தின் கடற்கரைக்கு மிக அருகில் புயல் இருக்கிறது. ஃபெஞ்சல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் நாளை மதியம் புதுவையை ஒட்டிய பகுதியில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. புயல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் என இரண்டு குழுக்களாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு விரைந்துள்ளனர். அதேபோல மாநில பேரிடர் மீட்பு படையினரும் விரைந்துள்ளனர்.
இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி சென்னையிலிருந்து தென் கிழக்கு பகுதியில் 300 கி.மீ தொலைவில் புயல் நிலைகொண்டிருக்கிறது. புதுவையிலிருந்து 270 கி.மீ புதுவை தொலைவில் புயல் இருக்கிறது. புயல் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவலான மழை பெய்யும் எனவும், புதுவை, மயிலாடுதுறை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 70 கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் 90 கி.மீ வேகத்திலும் தரைக்காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications