தமிழகத்திலேயே எங்கு அதிகபட்ச மழை பெய்தது தெரியுமா? சென்னையில் எங்கு எவ்வளவு?
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெய்வேலியில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அது போல் சென்னை உள்பட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது.

இதன் காரணமாக நேற்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. மேலும் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசியது. ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது.
இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசியது. கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. தமிழகத்தில் 6, 7 தேதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், 8,9, 10 தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் தலா 4 செமீ, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம், சென்னை ஆலந்தூர், சென்னை விமானநிலையம், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, கோமுகி அணை, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் தலா 3 செமீ, செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், சென்னை பள்ளிக்கரணை, காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நேற்று முதல் 8-ம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதலே கனமழை பெய்து வருகிறது. சென்னை முகப்பேர், அமைந்தகரை, கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல், ராமாபுரம், மதுரவாயல், வளசரவாக்கம், விருகம்பாக்கம், பூந்தமல்லி, திருவேற்காடு, குன்றத்தூர், மாங்காடு, பட்டாபிராம், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை விடிய விடிய மழை பெய்தது. சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. கிண்டி, அடையாறு, மயிலாப்பூர், வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், அண்ணாசாலை, மந்தவெளி, லஸ், கோயம்பேடு, திநகர், முகப்பேர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
அது போல் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, ஆவடி, அனகாபுத்தூர், குன்றத்தூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 5.30 மணி நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக நெய்வேலியில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அது போல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தலா 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications