"அடுத்த ஒரு வாரத்தில்.." சென்னை, தென்தமிழகத்தில் சம்பவம் ஓவர்.. அடுத்து மழை எங்கே.. வெதர்மேன் நறுக்
சென்னை: தமிழ்நாட்டில் பல பகுதிகளில் டிசம்பர் மாதம் கனமழை கொட்டிய நிலையில், வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் தென்கிழக்கு பருவமழை எதிர்பார்த்த மழையைத் தரவில்லை என்ற போதிலும், வடகிழக்கு பருவமழை நல்ல மழையைக் கொடுத்தது. மாநிலம் முழுக்க பரவலாக மழை பெய்த நிலையில், நீர் நிலைகள் நிரம்பின.

குறிப்பாக டிசம்பர் மாதம் கொட்டிய கனமழை பல்வேறு தரப்பினரையும் கடுமையாகப் பாதித்தது. மிக்ஜாம் புயல் காரணமாக இம்மாத தொடக்கத்தில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் கடுமையாகப் பாதித்தது.
கொட்டிய கனமழை: சென்னையில் நகர் முழுக்க மழை நீர் தேங்கிய நிலையில், அது வடியவே சில நாட்கள் வரை ஆனது. பிரதான சாலைகளில் நீர் உடனடியாக வடிந்தாலும் உட்புற சாலைகளில் மோட்டர் வைத்து நீரை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே கடந்த வாரம் மீண்டும் மழை கொட்டியது. இந்த முறை தென்தமிழகத்தில் பல மணி நேரம் கேப் விடாமல் பெய்த மழை தென்தமிழகத்தைப் புரட்டிப் போட்டது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் மழை கொட்டியது. குறுகிய காலத்தில் அதிகப்படியான மழை கொட்டிய நிலையில், அங்கும் பாதிப்புகள் மிக மோசமாக இருந்தது. இதற்கிடையே வரும் நாட்களில் மழை எங்கு இருக்கும். எங்குக் கனமழை இருக்கும். இதனால் ஏதாவது மோசமான ஆபத்துகள் ஏற்படுமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கியுள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன்: இது தொடர்பாக அவர் கூறுகையில், "அடுத்த ஒரு வாரத்திற்குத் தமிழகத்தில் எங்கும் கனமழை பெய்ய வாய்ப்பில்லை. தொடர்ந்து 2ஆவது ஆண்டாகக் கிறிஸ்துமஸ் தினத்தன்று சென்னையிலும் திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரத்திலும் கடலோர தமிழகத்திலும் மழை பெய்யும். ஆனால் அது லேசானது முதல் மிதமான மழையாக இருக்கும். இனிமையான ஒன்றாகவும் மற்றும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாகவும் அது இருக்கும். வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதமும் பெய்யும்.
புதுக்கோட்டை-சிவகங்கை பெல்ட்டில் டிசம்பர் 27ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஒரு ஆடியோ பரவி வருகிறது. ஆனால், அது உண்மையல்ல, வானிலை மாடல்கள் குறித்துத் தெரியாமல் யாரோ கூறியுள்ளார். தயவு செய்து பரப்ப வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார்.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் நேற்று வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பிலும் கிட்டதட்ட இதேதான் விளக்கப்பட்டிருந்தது. அதாவது, "தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வரும் 24ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல 25ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச.26 மற்றும் 27ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications