வெள்ளியை உருக்கியது போன்ற கொல்லிமலை ஆகாய கங்கை அருவி! இப்போ ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை!
சேலம்: கொல்லிமலை ஆகாயகங்கை அருவியில் எப்போதும் கொஞ்சமாவது தண்ணீர் கொட்டும் நிலையில் தற்போது ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய 3 மாவட்ட எல்லையிலும் மூலிகை வளம் நிறைந்த கொல்லிமலை சுற்றுலாத் தலம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள்.

கொல்லிமலையில் காண்பதற்கு அரிதான பல்வேறு இடங்கள் உள்ளன. அதில் ஒன்று ஆகாய கங்கை அருவி. சுமார் 160 அடி உயரத்தில் இருந்து விழும் நீரை கீழ் இருந்து பார்க்கும் போது ஆகாயத்தையே பிளந்து கொண்டு தண்ணீர் கொட்டுவது போல் காட்சியளிக்கும்.
இதனால்தான் இதற்கு ஆகாய கங்கை என பெயர் வந்தது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவிக்கு 1000 படிக்கட்டுகளில் இறங்கிச் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பயணிகளுக்குப் பலவிதமான மகிழ்வூட்டும் இடங்கள் உள்ளன. மேலும் படிக்கட்டுகளில் சில இடங்களில் பெரிய பாறையின் அடியில் செல்லும் போது பயணிகளுக்கு திகிலூட்டும் அனுபவத்தை ஏற்படுத்தும்.
படிக்கட்டுகளில் இறங்கிய பின்னர் அருவிக்குச் செல்ல பாறைகளின் மீது ஏறி செல்லும் நிலை உள்ளது. இதனால் பயணிகள் பலர் பாறைகளில் வழுக்கி கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. இதனால் அருவிக்குச் செல்ல இரும்பு பாலம் அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கொல்லிமலையில் ஆகாய கங்கையை தவிர முக்கிய இடங்களாக மாசிலா அருவி, அறப்பள்ளீஸ்வரர், கொல்லிபாவை என்ற இடங்கள் உள்ளன. கொல்லிமலை என்றாலே சித்தர்கள்தான் நினைவுக்கு வருவது. அது போல் மூலிகைகளும் இங்கு நிறைய காணப்படுகின்றன. இந்த மூலிகைகள் கலந்த நீர் ஆகாய கங்கை அருவியில் வருகிறது.
ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி செல்ல நுழைவுக் கட்டணமாக ரூ 30 வசூலிக்கப்படுகிறது. படிக்கட்டுகள் நெட்டாக இருப்பதால் ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா இருப்பவர்கள், முதியவர்கள் இங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இங்கு ஏறுவது மட்டுமில்லை, இறங்குவதும் கடினமாகவே இருக்கும்.
இங்கு குளித்துவிட்டு வந்தாலே புத்துணர்ச்சி கிடைக்கும். ஆகாய கங்கை அருவியை பார்க்கும் போது வெள்ளியை உருக்கி கொட்டுவது போல் இருக்கும். அருவியில் குளித்துவிட்டு கொல்லிமலையில் மூலிகை சூப் குடித்தால் போதும் செம புத்துணர்ச்சியாக இருக்கும்.
இப்படிப்பட்ட சிறப்புகளை கொண்ட ஆகாய கங்கையில் எப்போதும் கொஞ்சமாவது தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். மழை பெய்தால் அதிக தண்ணீரும், கோடை காலத்தில் ஏதோ குறைந்த அளவிலும் இருக்கும். ஆனால் தற்போது ஒரு சொட்டு நீர் கூட அருவியில் இருந்து வரவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள். அந்த அளவுக்கு கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால் நீர்வீழ்ச்சிகளில் கூட தண்ணீர் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications