அதிர போகுது வட தமிழகம்.. இன்று சென்னை உட்பட பல மாவட்டங்களில் பெரிய சம்பவம்.. வெதர்மேன் பரபர அலர்ட்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வந்த நிலையில், இன்று எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே கோடை வெயில் மிகக் கொடூரமாக வாட்டி வதைத்தது. இதனால் மதிய நேரங்களில் பொதுமக்களால் வெளியே கூட செல்ல முடியாத சூழலே ஏற்பட்டது.

ஆனால், ஜூன் 1ம் தேதி முதலே பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வரும் நிலையில், வெப்பம் தணிந்துள்ளது.
வெதர்மேன்: இதற்கிடையே இன்று எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இன்றைய தினம் வட தமிழகப் பகுதிகளில் நல்ல மழை இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அதிர போகுது: இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "(இன்று) மாலை/இரவில் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களான கேடிசிசி (காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு), வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூர், திருப்பத்தூர், ஈரோடு போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய செம மழை பெய்யும். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் வட தமிழகம் (இன்று) அதிரும்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இவை தண்டர்ஸ்டாம் காரணமாகப் பெய்யும் மழை என்பதால் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அளவில் மழை பெய்யும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். கடந்த சில வாரங்களாகவே அதீத வெப்பம் காரணமாக வடதமிழக மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த மழை இருக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வானிலை மையம்: முன்னதாக கிளைமேட் எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் நாட்கள்: நாளைய தினம் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 30 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வரும் ஜூன் 7 முதல் ஜூன் 10 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-36 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications