மதியம் 1 மணி வரை.. விடாமல் வெளுக்கப் போகும் மழை.. 12 மாவட்டங்களுக்கு அலர்ட்.. வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் நேற்று தலைநகர் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. இந்த நிலையில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக மதியம் 1 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் நேற்று பகல் முழுக்க வெயில் வாட்டி வதைத்தது. தென் மாவட்டங்கள் முதல் வட மாவட்டங்கள் வரை பரவலாக வெயில் கொளுத்தி எடுத்தது. ஆனால் மாலை நேரத்திற்கு பின்னர் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

சென்னையில் அடையாறு, பள்ளிக்கரணை, மேடவாக்கம், சைதாப்பேட்டை, நந்தனம், தரமணி, மடிப்பாக்கம், ஏழுமலை, ஆண்டிப்பட்டி என பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் ஒரு சில இடங்களில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 12 செமீ மழை பதிவாகியுள்ளது. அடையாறில் 10 செமீ மழை பதிவானது.
ஒரு சில இடங்களில் தாழ்வான சாலைகளில் தேங்கியிருந்த தண்ணீர் தற்போதும் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்துள்ளனர். குறிப்பாக சென்னை ஆதம்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் வண்டிக்காரன் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த தண்ணீரோடு கழிவுநீரும் கலந்துள்ளது. சென்னை ஆதம்பாக்கத்தில் தேங்கிக் கிடந்த மழைநீரோடு கழிவு நீரும் கலந்ததால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என மக்கள் புகார் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று மதியம் 1 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
"தமிழகத்தில் இன்று மதியம் 1 மணி வரை திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 4 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோன்று திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications