நள்ளிரவு 1 மணி வரை 11 மாவட்டங்களில் மழை சாறெடுக்கப்போகுது.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம்
சென்னை: இன்று நள்ளிரவு 1 மணிக்குள் சென்னை உள்பட தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
அடுத்த 3 மணி நேரத்துக்குள் அதாவது நள்ளிரவு 1 மணிக்குள் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான வலுவை இழந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பதிவில், தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ வேகத்தில் நகரத் தொடங்கியுள்ளது. இது சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 470 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 410 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 340 கிலோமீட்டர் கிழக்கு தென்கிழக்கு திசையிலும் மையம் கொண்டுள்ளது.
இது வடக்கு நோக்கி நகர்ந்து நவம்பர் 29 ஆம் தேதி காலை வரை ஆழமான காற்றழுத்தத் தாழ்வு நிலையைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. பின்னர், வடமேற்கு நோக்கி நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து, 29 ஆம் தேதி மாலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
தொடர்ந்து, வடமேற்கு நோக்கி நகர்ந்து, நவம்பர் 30 ஆம் தேதி காலை, காற்றின் வேகத்துடன் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே, வடதமிழகம்-புதுச்சேரி கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 45-55 கிமீ வேகத்தில் 65 கி.மீ வேகத்தில் வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும். 30 ஆம் தேதி கரையை கடக்கும்போது விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சியில் அதி கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (29.11.2024) வெள்ளிக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கடலூர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications