436 இடங்களில் மழைநீர் வடிந்தது.. 103 இடங்கள் தான் பாக்கி.. சென்னை மாநகராட்சி வெளியிட்ட குட் நியூஸ்!
சென்னை: சென்னையில் மழைநீர் தேங்கிய 539 இடங்களில் 436 இடங்களில் மழைநீர் வடிந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. மீதமுள்ள 103 இடங்களில் மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. கடந்த 2 நாட்களில் 54 மரங்கள் விழுந்த நிலையில் அவை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வந்தது. இதனால், சென்னையின் பிரதான சாலைகள், குடியிருப்புகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று பகலிலும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்ததால், மழைநீர் அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. மேலும், சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதிகனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஆனால், காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா நோக்கிச் சென்று கரையைக் கடப்பதால் சென்னையில் கனமழைக்கான வாய்ப்பு குறைந்துள்ளது. எனவே, தற்போது சென்னையில் சில இடங்களில் லேசான மழை மட்டுமே பெய்துள்ளது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடிந்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்கிய 539 இடங்களில் 436 இடங்களில் முழுமையாக தண்ணீர் வடிந்தது. மீதமுள்ள 103 இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களில் 54 மரங்கள் விழுந்த நிலையில் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. மொத்தம் 300 நிவாரண முகாம்களில், 27 இடங்களில் 944 பேர் தங்கியுள்ளனர்.
சென்னை முழுவதும் நடைபெற்று வரும் 100 மருத்துவ முகாம்களில் 5,657 பேர் பயனடைந்துள்ளனர். கடந்த 2 நாட்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் 7.18 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் கணேசபுரம் மற்றும் ஸ்டான்லி சுரங்கப்பாதைகள் தவிர, மற்ற அனைத்து சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேக்கம் இல்லை. மாநிலம் முழுவதும் 1,293 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 77,877 நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications