சென்னையை மொத்தமாக புரட்டி போட்ட மிக்ஜாம் புயல்! அமைச்சர் உதயநிதி தொகுதியில் இப்போது களநிலவரம் என்ன
சென்னை: கனமழையால் சென்னை திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதியின் தொகுதி இப்போது எப்படி இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சென்னையில் நேற்று முன்தினம் ஆரம்பித்து கனமழை இன்று விடியக்காலை வரை கேப் விடாமல் கொட்டி தீர்த்தது. கடந்த 2015ஆம் ஆண்டிற்குப் பிறகு சென்னையில் பெய்த அதிகபட்ச மழையாக இது இருந்தது.

வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாகவே இந்த கனமழை பெய்துள்ளது. மிக்ஜாம் புயல் இருக்கும் என்பதால் பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்கும்படி ஏற்கனவே தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டிருந்தது.
மிக்ஜாம் புயல்: மிக்ஜாம் புயல் சென்னை அருகே அருகே வந்த போது அது தீவிர புயலாக வலுப்பெற்றது. இதனால் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. கேப் விடாமல் எல்லா இடங்களிலும் கனமழை கொட்டிய நிலையில் முக்கிய சாலைகளிலும் நீர் தேங்கியது. மேலும், கனமழையால் நேற்று விமானச் சேவையும் ரத்து செய்யப்பட்டது. முதலில் இரண்டு மணி நேரம் மட்டுமே விமான நிலையம் மூடப்பட்ட நிலையில், அதன் பிறகு நாள் முழுக்க விமான நிலையம் மூடப்பட்டது.
இதனால் சென்னையில் விமானச் சேவை முற்றிலுமாக முடங்கியது. இதனால் நாடு முழுக்க பல நூறு விமானங்கள் ரத்து செய்யப்படும் சூழலும் ஏற்பட்டது. இந்த கனமழையால் நேற்று கடல் சீற்றத்துடன் இருந்த நிலையில், ஆற்று வெள்ளத்தையும் கடல் நீர் உள்வாங்கவில்லை. இதனால் நீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், சென்னை முழுக்க மழை நீர் தேங்கியே இருந்தது. நேற்றிரவு மழை நின்ற பிறகு, நீர் வடியத் தொடங்கியது. முதலில் முக்கிய சாலைகளில் நீர் வடிந்த நிலையில், பின்னர் மற்ற இடங்களிலும் மழை நீர் வடிந்தது.
அமைச்சர் உதயநிதி: இந்த கனமழையால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியிலும் நேற்றைய தினம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் நேற்று மழை இடங்களில் மழை நீர் தேங்கியது. அமைச்சர் உதயநிதி நேரடியாகக் களத்திற்குச் சென்று பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.
மேலும், மழை நின்றும் மழை நீரை அகற்றவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதற்கிடையே இப்போது மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வரும் நிலையில், பல இடங்களில் நீர் வடிந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இப்போது என்ன நிலை: இது தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில், "2015ஐ காட்டிலும் பல இடங்களில் நீர் அதிகமாகவே நேற்று தேங்கி இருந்தது. கடந்த 2015இல் கிட்டதட்ட 2 முதல் 2.5 நாட்கள் வரை மின்சாரம் இல்லை. ஆனால், இந்தாண்டு நேற்று ஒரு நாள் மின்சாரம் இல்லாமல் இருந்தது. இன்று பெரும்பாலான இடங்களில் மின்சாரம் வந்துவிட்டது. இன்று காலையே பல இடங்களில் மின்சாரம் வந்துவிட்டது.

ராயப்பேட்டை, ஜாம் பஜார் போன்ற பகுதிகளில் எப்போதுமே மழை நீர் தேங்கும். முன்பெல்லாம் சின்ன மழைக்கே நீண்ட காலம் மழை நீர் தேங்கும். இந்தாண்டும் மழை தேங்கியது என்ற போதிலும் அது வேகமாக வடிந்து வருகிறது.
திருவல்லிக்கேணி பகுதியிலும் நேற்று கனமழை பெய்ததால் மழை நீர் தேங்கி இருந்தது. இருப்பினும், அதுவும் பல இடங்களில் இன்று வடிந்துவிட்டது" என்று கூறுகின்றனர். அதாவது இந்தாண்டும் மழை காரணமாகப் பல இடங்களில் நீர் தேங்கினாலும் கூட அவை ஒப்பீட்டளவில் வேகமாக வடிவதாகப் பொதுமக்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications