ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய சென்னை! 7 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்!
சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு வலுவிழந்த நிலையில், தமிழக கடல் பகுதியை நோக்கி நகர்ந்தது. இதனால் வட தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இரவு 7 மணி வரை சென்னை தவிர 7 வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (டிச.25) காலை 8.30 மணி அளவில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக படிப்படியாக வழுவிழக்கக்கூடும்.

எனவே இன்று (டிச.25) வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், இதர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிச.26 மற்றும் டிச.27ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச.28 முதல் டிச.31 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 2 மணி நேரத்திற்கான அறிவிப்பை பொறுத்தவரை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தற்போது வரை தமிழ்நாட்டில் சராசரியாக 57.6 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இந்த நாட்களில் 43.6 செ.மீதான் பெய்திருக்க வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் இயல்பை விட 32% கூடுதலாக மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 85%, திருபத்தூர் மாவட்டத்தில் 84%, விழுப்புரம் 65%, சேலம் 62%, திருநெல்வேலி 61%, தருமபுரி 59% என மழை பெய்திருக்கிறது. சென்னையை பொறுத்த வரை கடந்த அக்.1ம் தேதி தொடங்கி இன்று வரை 104.6 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications