வரலாறு காணாத மழை கன்பார்ம்! ஐக்கிய அமீரகத்தில் நாளை ஆரம்பிக்கும் சம்பவம்.. வெதர்மேன் மெகா வார்னிங்
சென்னை: மத்தியக் கிழக்கு நாடுகளில் எப்போதும் மிகக் குறைவான மழையே பெய்யும். ஆனால், நாளை தொடங்கி இரண்டு நாட்கள் பல அரபு நாடுகளில் மழை கொட்ட உள்ளதாக வெதர்மேன் எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அடுத்த சில நாட்களுக்கு வெப்பம் குறைந்து, குளிர்ச்சியான ஒரு வானிலை நிலவும் என்றும் வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
மத்தியக் கிழக்குப் பகுதிகளில் எப்போதும் ஆண்டுக்கே குறைந்த அளவிலேயே மழை பெய்யும். ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் குறுகிய காலத்தில் அங்கு மழை கொட்டித் தீர்க்கும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. அதேபோல மீண்டும் ஒரு சம்பவம் இப்போது அங்கு நடக்கவுள்ளதாக வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். மேலும், தமிழ்நாடு கிளைமேட் தொடர்பாகவும் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன்
இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில், "டிசம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய பகுதிகளில் வழக்கத்திற்கு மாறான கனமழை பெய்யும். துபாயின் ஆண்டு சராசரி மழை அளவு சுமார் 100 மி.மீ மட்டுமே. ஆனால், சமீப காலங்களாக ஏற்படும் கால நிலை மாற்றத்தால், ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை வெறும் 2 அல்லது 3 நாட்களில் பெய்வது வழக்கமாகிவிட்டது.
குறிப்பாக 2020 ஜனவரி, 2021 டிசம்பர், 2022 ஜூலை, 2023 ஜனவரி, 2024 ஏப்ரல் (ஆண்டு சராசரியை விடச் சுமார் மூன்று மடங்கு அதிகம்) போன்ற காலகட்டங்களில் இத்தகைய தீவிர மழை நிகழ்வுகள் ஏற்பட்டன. டிசம்பர் 18, 19 தேதிகளில் பெய்யவுள்ள மழையையும் இதில் இமையும் எனத் தெரிகிறது.
மழைக்கான காரணம்
ஏற்கனவே வலுவான மேல் வளிமண்டல மேற்குத் திசைக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சவுதி அரேபியாவில் கனமழை கொட்டி இருக்கிறது. இது இப்போது கிழக்கு நோக்கி நகர்ந்து, ஐக்கிய அமீரகத்தின் வடக்குப் பகுதியான துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய நகரங்களுக்குச் செல்கிறது. இதனால் இந்தப் பகுதிகள் நேரடியாகப் பாதிக்கும். இதன் அமைப்பும் ஒருங்கிணைந்த மேகக் கூட்டங்களும் கனமழைக்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்கும்.
எந்த நாட்களில் மழை கொட்டும்
டிசம்பர் 18ம் தேதி மாலை முதல் துபாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களில் மழை தொடங்க வாய்ப்புள்ளது. 19ஆம் தேதி நாள் முழுவதும் பரவலாக மழை தொடரும். அன்று மாலைக்கு பிறகே மழை படிப்படியாகக் குறையும். ஐக்கிய அமீரகத்தின் வடக்குப் பகுதியான ராஸ் அல் கைமா மற்றும் அண்டை பகுதிகளிலும் வரும் டிசம்பர் 20 வரை மழை நீடிக்கலாம்.
கத்தார் (தோஹா) மற்றும் பஹ்ரைன் (மனாமா) ஆகிய நகரங்களிலும் டிசம்பர் 18 மற்றும் 19 தேதிகளில் இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் கனமழையைக் கொட்டும். ஈரான் நாட்டிலும் கூட இதனால் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. திடீர் மழையால் சில பகுதிகளில் திடீர் வெள்ள அபாயமும் உள்ளது.
சென்னை சம்பவம்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாளை முதல் 'குளுகுளு' வானிலை மீண்டும் திரும்பும். டிசம்பர் 20ம் தேதி சென்னை உட்பட கேடிசிசி பகுதிகளில் மிகக் குளிரான இரவு இருக்கும். வெப்பம் எந்தளவுக்குச் சரியப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்தே கவனிக்க வேண்டும்!
2018க்குப் பிறகு முதல்முறையாக, தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பு அளவை விட 10-15 மி.மீ குறைவாகப் பெய்யக்கூடும். கடந்த 6 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழையில் நமக்கு இயல்பை விட அதிக மழை கிடைத்து வந்த நிலையில், அது முடிவுக்கு வருகிறது.. சென்னை 130 மி.மீ குறைவான மழையைப் பெற்று, 2019க்குப் பிறகு மிகக் குறைந்த வடகிழக்குப் பருவமழையைப் பெறும். சென்னையிலும் கடந்த 5 ஆண்டுகளாக இயல்பை விட அதிக மழை பெய்து வந்த நிலையில், அதுவும் முடிவுக்கு வருகிறது.
அதேநேரம் தென்மேற்குப் பருவமழை மற்றும் அக்டோபரில் பெய்த சிறப்பான மழையால், மாநிலத்தின் அனைத்து ஏரிகளும் முழுமையாக நிரம்பியுள்ளன என்பது ஆறுதலான செய்தியாகும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications