2 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’.. அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.. சென்னை நிலவரம் என்ன?
சென்னை: திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களுக்கு இன்று அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த 2 மாவட்டங்களில் 20.4 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் வட கிழக்குப் பருவ மழை தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 16 ஆம் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications