தூக்கி அடிக்க இருக்கும் 'மிக்ஜாம்' புயல்! தயார் நிலையில் மீட்பு படை! அவசரக் கால உதவி எண்கள் வெளியீடு
சென்னை: புயலின் காரணமாக பலத்த காற்றுடன் அதி கன மழை பெய்யும். இதனால், மின் கம்பங்கள், மின் கம்பிகள், மரங்கள் விழுவதற்கு வாய்ப்புள்ளதால், பொது மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையில்லாமல் வெளியில் வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என அரசு சார்பில் அனைவருக்கும் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு வருகிறது. அதேபோல அவசர உதவி என்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 05.30 மணி அளவில் 'மிக்ஜாம்' புயலாக வலுப்பெற்றது. இது 11.30 சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாளை(டிச.04) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் (ரெட் அலர்ட்), ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
அதேபோல காற்றும் மணிக்கு 100-117 கி.மீ வேகத்தில் வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. இந்நிலையில், இந்த புயல் பாதிப்பிலிருந்து தப்பிக்கவும், பாதுகாக்த்துக்கொள்ளவும் தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. அதாவது,
மிக்ஜாம் புயல் சென்னைக்கு மிக அருகில் கடந்து செல்வதால், மிக கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் இன்று (டிச.3) முதல் பொதுமக்கள் பின்வரும் எச்சரிக்கையை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.
அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிருவாகத்தின் அறிவுரையின் பேரில் முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்.
முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
ஒரு சில நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான உணவு, நீர், பால் மற்றும் மருந்துகளை கையிருப்பில் வைக்க வேண்டும்.
கயிறு, மெழுகுவர்த்தி, கைமின் விளக்கு (torch light), அவசர விளக்கு (emergency light), தீப்பெட்டி, மின்கலங்கள் (batteries), மருத்துவ கட்டு (band aid), உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள் மற்றும் குளுகோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.
பலத்த காற்று காரணமாக ஆஸ்பெஸ்டாஸ் மற்றும் தகடுகளாலான மேற்கூரைகள் பறந்து விழுவதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் மொட்டை மாடிகளில் நின்று வேடிக்கை பார்க்க வேண்டாம்.
கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும்.
ஆபத்தான இடங்களிலும், நீர்நிலைகளுக்கு அருகிலும் தன்படம் (செல் ஃபி) எடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
மரத்தடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.
புயலின் காரணமாக பலத்த காற்றுடன் அதி கன மழை பெய்யும். இதனால், மின் கம்பங்கள், மின் கம்பிகள், மரங்கள் விழுவதற்கு வாய்ப்புள்ளதால், பொது மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையில்லாமல் வெளியில் வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
புயல் தொடர்பான எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அவசர உதவிக்கு பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். மாநில அவசரகால செயல்பாட்டு மையம் - 1070, வாட்ஸ் அப் எண். - 94458 69848, மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம் - 1077" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளைய தினம் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications