கொங்கு பகுதியை சுத்துப்போட்ட கனமழை! கோவை, திருப்பூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று லீவ்!
கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை மற்றும் திருப்பூரில் நேற்றிரவு கனமழை பெய்திருக்கிறது. எனவே, இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஜூலையில் தொடங்கி செப்டம்பர் இறுதிவரை தென்மேற்கு பருவமழை பெய்திருந்தது. வழக்கமான அளவை விட அதிக மழைப்பொழிவை இது கொடுத்திருந்தது. குறிப்பாக கோவை, நீலகிரி, திருப்பூர் என கொங்கு மாவட்டங்களில் இயல்பை விட கூடுதல் மழை பெய்திருந்து. தற்போது தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. தொடக்கம் முதல் கடுமை காட்டி வரும் இது, கொங்கு மாவட்டங்களில் தனது ஆதிக்கத்தை அதிகரித்துள்ளது.

குறிப்பாக கோவை மற்றும் திருப்பூரில் நேற்று அதிக அளவு கனமழை பெய்திருக்கிறது. கோவையை எடுத்துக்கொண்டால் கடந்த 24 மணி நேரத்தில் 9 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இது கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பதிவான அதிகபட்ச மழையின் அளவாகும். மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியிருக்கிறது.
குறிப்பாக அவிநாசி மேம்பாலம், லங்கா கார்னர், கிக்கானி பள்ளி அருகில் உள்ள பாலம், காளீஸ்வரா மில் சாலை, மேட்டுப்பாளையம் சாலை சிவானந்தா காலனி ஏ.ஆர்.சி பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் அதிக அளவில் தேங்கியிருந்தது. பின்னர் மாநகராட்சி ஊழியர்களை கொண்டு மோட்டார் மூலம் நீர் வெளியேற்றப்பட்டிருக்கிறது.
கடுமையான மழை காரணமாக நேற்றிரவு இரவு 9:20க்கு புறப்பட்ட நீலகிரி எக்ஸ்பிரஸ் காரமடையை தாண்டவே நீண்ட நேரம் எடுத்துக்கொண்டது. மேலும் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரவேண்டிய மெமோ ரயிலும் தாமதமாகியது.
மேட்டுப்பாளையம் அருகே கோட்டைப் பிரிவில் இருந்து ஒன்னிபாளையம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே பாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் கார்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் இன்று கோவை மற்றும் திருப்பூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications