கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு விவரம்
ராணிப்பேட்டை: மிக்ஜாம் புயல் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவித்திருந்த நிலையில், தற்போது விழுப்புரத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 05.30 மணி அளவில் 'மிக்ஜாம்' புயலாக வலுப்பெற்றது. இது 11.30 சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலை கொள்ளும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாளை(டிச.04) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் (ரெட் அலர்ட்), ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது எனவும் ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
இப்படி இருக்கையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை(டிச.4) பள்ளி, கல்லூரி மட்டுமல்லாது அனைத்து நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் நாளை ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications