School leave: தொடரும் கனமழை.. சென்னை, திருவள்ளூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. ஆட்சியர்கள் அறிவிப்பு!
சென்னை: கனமழை காரணமாக சென்னையில் நாளை (டிசம்பர் 4 ஆம் தேதி) வியாழக்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவித்துள்ளார்.
டிட்வா புயல் காரணமாக சென்னை உள்பட வட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து கடந்த 3 நாட்களாக சென்னையில் கொட்டி வரும் கனமழை பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

சென்னையில் நாளை ஸ்கூல் லீவு
தண்ணீரை வெளியேற்ற தொடர்ந்து அரசு மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்றும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் நாளைக்கும் சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தொடர் கனமழை காரணமாக மாணவ மாணவிகளின் பாதுகாப்பு கருதி நாளை வியாழக்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திருவள்ளூரிலும் பள்ளிகளுக்கு விடுமுறை
இதேபோன்று திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்து வருவதாலும், தொடர்ந்து கனமழை எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டு இருப்பதனாலும் மாணவ மாணவிகளின் பாதுகாப்பு கருதி திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுகிறது என ஆட்சியர் பிரதாப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மாலையில் ரெட் அலர்ட் எச்சரிக்கை
இன்று மாலையில் திருவள்ளூர், வட சென்னையில் மிக கனமழை கொட்டி தீர்த்தது. வானிலை ஆய்வு மையமும் கூட இன்று மாலையில் வட சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. தொடர்ந்து மழையும் பெய்து வருவதாலும், புழல் ஏரியில் நீர் இருப்பு அதிகரித்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாலும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
மேலும் இரவிலும் அவ்வப்போது மழை விட்டு விட்டு தொடர்ந்து பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி மேற்படி இரு மாவட்டங்களிலும் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை எங்கெல்லாம் கனமழை பெய்யும்?
இன்று நீலகிரி, கோவை, ராணிப்பேட்டை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், குமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு. சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை வியாழக்கிழமை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று நாளை கிளைமேட்
சென்னையில் இன்று (03-12-2025): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். பொதுவாக வெப்பநிலை 24-26° செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (04-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27-28" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். என்று வானிலை மையம் கூறியிருந்தது.












Click it and Unblock the Notifications