இன்னைக்கு நைட் செம மழை இருக்கு! சென்னை, திருவள்ளூர் உள்பட.. தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த ஜில் அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களிலும் பரவலாக நல்ல பெய்து வரும் நிலையில், இன்று இரவு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இருப்பினும், தென் இந்தியாவில் மழை சற்று குறைவாகவே இருந்தது. கேரளாவில் பருவமழை சுமார் 50% குறைவாகப் பெய்துள்ளது. இருந்தாலும் நடப்பு வாரத்தில் கேரளாவில் ஓரளவு நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

தமிழகத்திலும் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும் இரவு நேரத்தில் திடீரென மழை பெய்வதுமாக இருந்தது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், வட தமிழகம் மற்றும் குமரிக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
அதாவது, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தென்காசி, திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த நிலையில், இன்று இரவு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக் தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டு இருப்பதாவது:-
இன்றும் நாளையும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சித்தூர், திருப்பதி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளில் பெரிய அளவில் மேகங்கள் திரள்வதை பார்க்க முடிகிறது. இன்று இரவு சுவாரசியமானதாக இருக்க போகிறது. இந்த மாவட்டங்களில் சில பகுதிகளில் 100 மி.மீட்டர் மழை பெய்யக்கூடும். பிற மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், கோடைக்கானல், சேலம், வால்பாறை ஆகிய பகுதிகளிலும் இன்று இரவு கனமழையை பெறும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications