வங்கக்கடலில் தீவிரமாகிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மேஜர் அலர்ட்
சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என்றும் அடுத்த 2 நாட்களில் வட மேற்குத்திசையில் தமிழ்நாடு, இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதையடுத்து, மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாட்டில் பருவமழை பெய்து வருகிறது.. அதிலும் சமீப நாட்களாகவே அனைத்து மாவட்டத்திலும் பரவலான மழை பெய்து வருகிறது. இதனால், நீர்பிடிப்பு பகுதிகள் கணிசமாக நிரம்பியுள்ளன.

இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
வங்கக்கடல்: அந்த அறிவிப்பில், "தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதியில் நிலவி வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.
அடுத்த 2 நாட்களில் வட மேற்குத்திசையில் தமிழ்நாடு, இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
எச்சரிக்கை: அதன்டி, இன்று அதாவது நவம்பர் 25 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்களிலும் கனமழையை எதிர்நோக்கி தமிழகம் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள்..
குறிப்பாக, மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்று கன முதல் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யகூடும் என்றும் அலர்ட் செய்யப்பட்டுள்ளது.
மீனவர்கள்: தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், இதனால் இன்றும் நாளையும் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கண்ட பகுதிகளில் வரும் 27,28 ஆகிய தேதிகளில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்பதால் அன்றைய தினங்களிலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றொரு அறிவிப்பை இன்று காலை வெளியிட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 3 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு என அறிவித்துள்ளது.
மகிழ்ச்சியில் சென்னை: தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மழை பெய்யும் என்றும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை மற்றும் இரவு வேளைகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டிருப்பது சென்னைவாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
நாளை, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications