இந்திய பெருங்கடலில் நெகட்டிவ் ஐ.ஓ.டி.. வலுவான புயல் உருவாக வாய்ப்பு .. டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர்
சென்னை: இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இயல்பைவிட அதிகமாக பெய்துள்ளது. அண்மையில் மொந்தா புயல் வங்ககடலில் உருவாகி இருந்தது. ஆனால் அந்த புயல் ஆந்திராவை நோக்கி சென்று காக்கிநாடா அருகே கரையை கடந்தது. இதனால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.. எனினும் இந்திய பெருங்கடலில் வெப்பநிலை அதிகரிப்பு எதிரொலியாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் வலுவான புயலுக்கு வாய்ப்பு இருப்பதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பே தமிழ்நாட்டில் தொடங்கிவிட்டது. இதன் காரணமாக அடிக்கடி பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. முதலில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. அதன்பிறகு தென்மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்தது. அப்படியே அந்த மழை வடமாவட்டங்களையும் தாக்க தொடங்கியது.

இதனிடையே நடப்பாண்டில் பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே 'மொந்தா' புயல் உருவாகியது. இந்த புயல் தமிழ்நாட்டை நோக்கி வரவில்லை. மாறாக ஆந்திராவை நோக்கி சென்றது. எனினும் திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட வட மாவட்டங்களில் ஓரளவுக்கு நல்ல மழை பெய்திருந்தது. தற்போது பருவமழை சற்று ஓய்ந்துள்ளது. மீண்டும் வெயில் வந்துள்ளது. இநநிலையில் நவம்பர் 10-ந் தேதியில் இருந்து மீண்டும் பருவக்காற்று திரும்பி, 15-ந் தேதிக்கு பிறகு மழை தீவிரமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுபற்றி கூறிய, டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வலுவான புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளார். புயல் உள்ளிட்ட வானிலை நிகழ்வுகள் (தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலம்) உருவாவதற்கும், கடல் சார்ந்த அலைவுகளை ஈர்ப்பதற்கும் கடலின் வெப்பநிலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், இது வங்கக்கடலில் தற்போது சாதகமாக உள்ளதாகவும் கூறினார்.
மேலும் டெல்டா வெதர்மேன் கூறுகையில், இந்திய பெருங்கடலில் சுமத்ரா கடற்கரை அருகே கடல் மேற்பரப்பில் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதேநேரத்தில் சோமாலியா கடற்கரை அருகே குளிர்ச்சி நீடிப்பதால், மழைக்கான சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் இந்திய பெருங்கடல் இருமுனை எதிர்மறை நிகழ்வு (நெகட்டிவ் ஐ.ஓ.டி.) என அழைக்கப்டும். இது அடுத்துவரும் 2 வாரங்களில் மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு இருக்கிறது.
ஏற்கனவே இதேபோன்ற நிகழ்வு 2019-ம் ஆண்டில் நிகழ்ந்தது. அப்போது அரபிக்கடலில் அடுத்தடுத்த வானிலை நிகழ்வுகள் ஏற்பட்டன. அதில் ஒன்று 'சூப்பர்' புயலாகவும், ஒன்று அதி தீவிர புயலாகவும், ஒன்று மிக தீவிர புயலாகவும் வலுவடைந்தது. இதுதவிர மற்றவை தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலங்களாக உருவானது.
எனவே இந்திய பெருங்கடலில் தற்போதைய கடல் வெப்பநிலை அதிகரிப்பு எதிரொலியாக வங்கக்கடலில் அடுத்தடுத்து தொடர் நிகழ்வுகளும், வலுவான புயலும் உருவாக வாய்ப்பு. இது நல்ல மழையை கொடுக்கும் நிகழ்வுகளாக இருக்கும்" இவ்வாறு டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறினார்.












Click it and Unblock the Notifications