கருகப் போகுது நம்ம ஊரு.. வேலையைக் காட்டும் வெயில்! இன்றைய வானிலை எப்படி இருக்கும்? மெட் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக வானிலையில் மாற்றம் ஏற்பட்டு வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்த நிலையில், தற்போது மீண்டும் வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் அதிகமாக இருக்கும் மே மாதத்தில் மழை பெய்த நிலையில் மலை தொடங்க இருக்கும் ஜூன் மாதத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த சில தினங்களாகவே நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்த நிலையில் தற்போது வானிலை அடியோடு மாறி இருக்கிறது. மழை பெய்த பகுதிகளில் எல்லாம் வெயில் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வருகிறது.

இதனால் மக்கள் அசௌகரியமாக உணர்கின்றனர். கோடை வெயில் குறையும் என எதிர்பார்த்த நேரத்தில் திடீரென வெயில் அதிகரித்து இருப்பது மக்களை கடும் இன்னலுக்கு ஆளாக்கி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியாகியுள்ள அறிவிப்பில்," இன்று (22.06.2026) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்தவரை, இன்று (22-06-2025) தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும். தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னையில் இன்று (22-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, வடக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்பதால், வரும் 24ஆம் தேதி வரை குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications