மழை முடிஞ்சது.. வெயில் இனி பொளக்கும்! சென்னை வானிலை மையம் வார்னிங்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வந்தது. இதனால் வெயிலின் தீவிரம் சற்று குறைந்திருந்தது. இந்நிலையில் இன்று தொடங்கி அடுத்த 2 நாட்களுக்கு வெயில் தீவிரமாக இருக்கும் என்றும், இதனால் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நேற்று சென்னையில் 1001 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தியிருந்த நிலையில், வானிலை மையத்தின் அறிவிப்பு புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை பொறுத்த வரை, தற்போது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 4 முதல் 8 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்த அளவில், இன்று தொடங்கி ஜூன் 4 வரை, தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதேபோல இந்த தேதிகளில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (02-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (03-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகளை பொறுத்தவரை, இன்றும் நாளையும் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஜூன் 4 முதல் 6 வரை எச்சரிக்கை ஏதுமில்லை.

வங்கக்கடல் பகுதிகள்:
இன்றும நாளையும் மத்திய வங்கக்கடலின் ஒருசில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், வீசக்கூடும்.
ஜூன்.4ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், வீசக்கூடும். ஜூன்.5 மற்றும் 6 வரை எச்சரிக்கை ஏதுமில்லை.
அரபிக்கடல் பகுதிகள்:
இன்று தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்மேற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அரபிக்கடல், கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்மேற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, கர்நாடக-வடகேரள கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஜூன் 4 முதல் 6 வரை தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் மத்தியமேற்கு அரபிக்கடலின் ஒரு சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. பதிவான மழையை பொறுத்தவரை, சந்தியூர் KVK AWS (சேலம்) 4 செ.மீ, கொடைக்கானல் (திண்டுக்கல்), சிங்கம்புணரி (சிவகங்கை), மங்களபுரம் (நாமக்கல்), நத்தம் AWS (திண்டுக்கல்) தலா 1செ.மீ. என மழை பதிவாகியிருக்கிறது.
வெப்பநிலை நிலவரம்:
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-5* செல்சியஸ் உயர்ந்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருந்தது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருந்தது.
அதிகபட்ச வெப்பநிலை:- மதுரை (விமான நிலையம்): 40.7° செல்சியஸ்
குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்).- கரூர் பரமத்தி. 21.5° செல்சியஸ்" என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications