நள்ளிரவில் 135 கி.மீ வேகம் வரை சூறைக்காற்று வீச வாய்ப்பு.. மீனவர்களை ‘அலர்ட்’ செய்யும் வானிலை மையம்!
சென்னை: ரெமல் புயல் எதிரொலியாக தமிழக மீனவர்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடல் பகுதியில் நள்ளிரவு வரை 135 கி.மீ வேகம் வரை பலத்த சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரெமல் புயல் தாக்கம் காரணமாக குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

28ஆம் தேதி குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பாகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 29 ஆம் தேதி குமரிக்கடல் பகுதிகளில் சுறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடல் பகுதிகளை பொறுத்த அளவில் இன்று மாலை வரை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் அதன் பிறகு மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 135 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அந்தமான் தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கு இடையிடையே 55 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்பு வங்கக் கடலில் 135 கி.மீ வேகத்திலும் சூறைக்காற்று வீச வாய்ப்பு உள்ளது. எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. ஆழ்க்கடல் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
வங்ககடலில் ரெமல் புயல் உருவாகி, தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இதனால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இன்று காலை 11 மணியளவில், ரெமல் புயல் சாகர் தீவில் இருந்து 240 கி.மீ தொலைவில் நிலவி வந்தது. இதன் காரணமாக ஹவுரா, ஹூக்ளி, கொல்கத்தா, கிழக்கு மிட்னாபூர் ஆகிய இடங்களில் இன்று பிற்பகல் முதல் 45 முதல் 55 கி.மீ வேகத்தில் புயல் வீசக்கூடும்.
பின்னர் மணிக்கு 65 கிலோ மீட்டராக இதன் வேகம் அதிகரிக்கலாம். இன்று இரவு, கொல்கத்தா, ஹவுரா, ஹூக்ளி ஆகிய இடங்களில் மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிலோமீட்டர் ஆக இருக்கும், வங்கதேசம் அருகே இன்று நள்ளிரவு ரெமல் புயல் தீவிர புயலாக கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கங்கை கரை மற்றும் கடலோர மேற்கு வங்கத்தில் பலத்த மழை பெய்யும். இன்றும் நாளையும் வங்கதேசத்தை ஒட்டியுள்ள கங்கை மேற்கு வங்கத்தின் கிழக்கு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications