வங்க கடலில் காத்திருக்கும் சம்பவம்.. ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குமே குட் நியூஸ்! இன்றைய வானிலை எப்படி?
சென்னை: வங்கக் கடலில் இந்த வார இறுதுக்குள் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது நவம்பர் 15ஆம் தேதிக்குள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்பதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சுமார் 5.8 கிமீ உயரம் வரை தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் நவம்பர் 13 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று நவம்பர் 15 ஆம் தேதிக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வானிலை,
இதனால் அடுத்த வாரம் வட தமிழகத்தை நோக்கி மழை பெய்யும் மேகங்கள் நகரக் கூடும். நவம்பர் மாதம் தான் பல மாவட்டங்களுக்கு மிக முக்கியமான மழைக் காலமாக கருதப்படுகிறது. குறிப்பாக சென்னை, நாகை, கடலூர், திருச்சி உள்ளிட்டு மாவட்டங்களில் நவம்பர் மாதத்தில் தான் மழை பெய்கிறது. நடப்பு வடகிழக்கு பருவமழை காலத்தில் சில மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் தொடர்ந்து மழை பற்றாக்குறையை பதிவு செய்து வருகின்றன.
காற்றழுத்த தாழ்வு பகுதி
இதனால் குடிநீர் தேவைக்கு விவசாய தேவைக்கும் பருவ மழை பெய்ய வேண்டியது அவசியம். இத்தகைய சூழலில் வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்துக்கு மழையை கொண்டு வருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்றும் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இன்றைய வானிலை
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், இன்று தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஏனைய வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
லேசான மழை
நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மிதமான மழை
நாளை மறுநாள் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் மிக லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை வானிலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிக லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்." எனக் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
