சட்டென்று மாறுது வானிலை.. வெளுத்து வாங்கப் போகுது கனமழை! தமிழகத்தின் இன்றைய மழை அப்டேட்!
சென்னை: வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக் கூடும் எனவும், இதனால் தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," நேற்று முன்தினம் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத்தாழ்வு பகுதி நேற்று காலை 0530 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மத்தியகிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடைந்து, மத்தியமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.

இது இன்றைக்குள் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும். இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மத்தியமேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திர- தெற்கு ஓடிசா கடலோர பகுதிகளை 23 ஆம் தேதி காலையில் சென்றடையக்கூடும்.
சுமார் 4.5 முதல் 7.6 கி.மீ உயரம் வரை மத்திய தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.. சுமார் 5.8 முதல் 7.6 கி.மீ உயரம் வரை தென்கிழக்கு அரபிக்கடல் முதல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியுடன் தொடர்புடைய வளிமண்டல சுழற்சி வரை கேரளா, தமிழகம் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் வழியாக காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இதனால், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
நாளை மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்." என கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
