சென்னைக்கு இன்று இரவோடு குட்-பை சொல்லும் மழை.. நாளைக்கு குடை தேவையில்லை: வெதர்மேன்
சென்னை: இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி மூலமாக சென்னைக்கு இதுதான் கடைசி மழையாக இருக்கும். நாளை முதல் மழை முழுவதுமாக குறைந்துவிடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் சென்னைக்கு பெய்ய வேண்டிய மழை இதுவே கடைசியாக இருக்க வாய்ப்புகள் உண்டு.

இன்று இரவு மற்றும் நாளை முதல் மழையானது ஒட்டுமொத்தமாக குறைந்துவிடும் என தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை வெளுத்து வருகிறது. அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்தாலும் குறைந்த அளவில் கொட்டு கொட்டென கொட்டுகிறது. இதனால் சென்னையில் இரு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன. போரூரில் மார்க்கெட் பகுதியில் முழங்கால் வரை தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதிப்படுகிறார்கள். சாத்தூர் அணை, தென்பெண்ணை ஆறு, பூண்டி ஏரி உள்ளிட்டவை திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் மற்றொரு பதிவில் கூறியிருப்பதாவது: கிழக்கு கடற்கரைச் சாலையை நோக்கி மேகக் கூட்டங்கள் நகர்கின்றன. அதாவது சிறுச்சேரி- மாம்பாக்கம்- தாம்பரம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என குறிப்பிட்டிருந்தார்.
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவது குறித்து வானிலை ஆய்வு மைய அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, மெல்ல நகர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, இலங்கை கடலோரத்தை ஒட்டிய, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவியது.
இன்று, மேற்கு, வடமேற்கு திசையில், தமிழகம், இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, மீண்டும் தீவிரமடையும். தமிழகத்தின் 35 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் அநேக இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்யவும், டிச., 17 வரை மிதமான மழை தொடரும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும், வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 35 மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை கொட்டி வரும் நிலையில் சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அது போல் சென்னை- வேளச்சேரி, நீலாங்கரை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், 13, 16, 17 ஆகிய தேதிகளிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications