"சென்னை+ புறநகர்.." இன்று மாலை மழை கொட்டும்.. வெதர்மேன் கொடுத்த அலர்ட்- அப்போ மற்ற இடங்கள்?
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வரும் நிலையில், இன்றைய தினம் மாநிலத்தில் என்ன வானிலை நிலவும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். பல்வேறு நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்யும் என்ற அவர், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கோடைக் காலம் முடிந்து பருவமழை தொடங்கியது முதலே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் தொடர்ந்து நல்ல மழை பெய்தது.

தமிழ்நாடு வெதர்மேன்: மேலும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே வரும் நாட்களில் நிலவும் வானிலை தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "1. குடகு (கேஆர்எஸ் மற்றும் ஹாரங்கி நீர்பிடிப்பு பகுதி), சிக்மகளூர் மற்றும் ஹாசன் மாவட்டங்களில் (ஹேமாவதி நீர்ப்பிடிப்பு பகுதி) காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடரும். வயநாட்டிலும் (கபினி நீர்ப்பிடிப்பு பகுதி) தொடர்ந்து கனமழை பெய்யும். 2. வால்பாறை மற்றும் நீலகிரி (அவலாஞ்சி - அப்பர் பவானி பெல்ட்) பலத்த மழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர்: 3. சுதந்திர தினத்திற்கு முன்பே மேட்டூர் அணை 120 அடியை (முழு கொள்ளளவு) தொட வாய்ப்பு உள்ளது. 4. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் இன்று மாலை / இரவு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 5. மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் தமிழகத்தின் மற்ற பெரும்பாலான இடங்கள் வறண்ட வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
வானிலை மையம்: முன்னதாக வானிலை தொடர்பாகச் சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். அதேபோல ஜூலை 27 முதல் 30 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழக கடலோர பகுதிகளில் வரும் ஜூலை 28 வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications