விடிய விடிய மழை இருக்காமே.. "இவங்க" மட்டும் ஜாக்ரதையா இருக்கணும்.. தமிழ்நாடு வெதர்மேன் திடீர் அலர்ட்
சென்னை: தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்து வரும்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் 2 ட்விட்களை பதிவிட்டு, அலர்ட் எச்சரிக்கை தந்துள்ளார்.
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

டெல்டா மாவட்டம்: குறிப்பாக, டெல்டா மாவட்டங்களான, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 78 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
வானிலை மையம்: அதற்கேற்றவாறு, மழையும் தமிழகம் முழுக்க கொட்டி வருகிறது.. இதனிடையே, தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், அரியலூர், திண்டுக்கல், கரூர், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு வெதர்மேன் காலையிலேயே ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார்..
அதில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது... சென்னையில் இன்று இரவு முதல் காலை வரை பரவலாக நல்ல மழை பெய்யும்.. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், தி.மலை, கடலூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், தஞ்சாவூர் போன்ற பிற மாவட்டங்களிலும் மழை பெய்யும்.
ஊட்டி, கொடைக்கானல்: ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல் ஆகிய மலைப்பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்" என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்னொரு ட்வீட்டினை பதிவிட்டுள்ளார். அதில், இன்று உத்தரகாண்டில் அதிக கனமழை முதல் தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளது.. மேலும், இமாச்சலத்திலும் கனமழை பெய்யக்கூடும்.. அதனால், இமயமலை அடிவாரத்திற்கு செல்வதை தற்காலிகமாக தவிர்க்கவும் என்று வெதர்மேன் அறிவுறுத்தியிருக்கிறார்












Click it and Unblock the Notifications