தமிழகத்திற்கு மழை இருக்கா? இல்லையா? "பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.." வெதர்மேன் நறுக்
சென்னை: வங்கக்கடலில் இப்போது புதிதாக உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இது தொடர்பான தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ளார். இதன் காற்றழுத்த தாழ்வு நிலையானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுமா.. இது தமிழகத்தில் எங்கெல்லாம் மழையைத் தரும் என்பது குறித்த தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியது முதலே மாநிலம் முழுக்க கணிசமான அளவுக்கு மழை கொட்டி வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி:
குறிப்பாக வடமாவட்டங்களுக்கு இந்த முறை தொடர்ச்சியாக நல்ல மழை கிடைத்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட வடமாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கிடையே இப்போது மீண்டும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இது வட கடலோர பகுதிகளுக்கு மீண்டும் மழையைத் தரும் என எதிர்பார்க்கப்பட்டது.
தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்:
இதற்கிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இது தொடர்பான முக்கிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார். இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில், "காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து, இப்போது அழகான வெப்பச் சலனமாக இருக்கிறது. இது இப்போது கிட்டதட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கிறது. இது மேலும் வடக்கு நோக்கி இழுத்துச் செல்லப்படும்.. பின்னர் சில நாட்களுக்குப் பிறகு அது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக நடுக்கடலிலேயே இருந்துவிடும்.
அதற்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து, பலவீனமாகிவிடும். அதே குறைந்த வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிறிஸ்துமஸுக்குப் பிறகு மீண்டும் திரும்ப வந்த டிசம்பர் 26, 27 தேதிகளில் தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் நல்ல மழையைக் கொடுக்கும். இதுக்கு பருத்தி மூட்டை பேசாம குடோன்லயே இருந்திருக்கலாமே என்றே நமக்கு தோன்றும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
வானிலை மையம் சொல்வது என்ன:
முன்னதாக வானிலை மையம் நேற்றைய தினம் வெளியிட்டிருந்த தினசரி செய்திக்குறிப்பில், "நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். டிச.21 முதல் 25 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒரு சில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும்.அதிகபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மேலும், இதனால் ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை டிச.21ம் தேதி வடக்கு கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு ஒரிசா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்" என்று வானிலை மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications