"இன்று ஆட்டம் ஆரம்பம்.." அடுத்த 10 நாட்கள் தமிழகத்தில் மழை வெளுக்க போகுது.. வெதர்மேன் பரபர அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கோடைக் காலம் முடியும் முன்பே பல்வேறு இடங்களிலும் மழை ஆரம்பித்துவிட்டது. இதனால் இந்தாண்டு பெரியளவில் எங்கும் கோடை வெப்பம் உணரப்படவில்லை. இதற்கிடையே அடுத்து வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது தொடர்பாக வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் இந்தாண்டு கோடை வெப்பத்தின் தாக்கம் பெரியளவில் காணப்படவில்லை. வழக்கமா மே மாதம் தான் தமிழகத்தில் வெப்பம் உச்சத்திற்குப் போகும். ஆனால், இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக பெரும்பாலான இடங்களில் மே மாதம் நல்ல மழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் பெரிதாகத் தெரியவில்லை.

மழை ஆரம்பித்தது
அதேபோல இந்தாண்டு பருவமழையும் கூட முன்கூட்டியே ஆரம்பித்துவிட்டது. இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்து சில நாட்களில் எங்கெல்லாம் மழை இருக்கும் என்பது குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். கன்னியாகுமரியில் ஆரம்பிக்கும் மழை, மெல்ல விரிவடையும் என்றும் அடுத்த 10 நாட்கள் மழை கொட்டும் என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
ஆட்டம் ஆரம்பம்
இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் சீக்கிரமே ஆட்டம் ஆரம்பமாகும். இன்றிரவு முதல் மழை அதிகரிக்கும். வால்பாறை, நீலகிரி (கூடலூர்) பகுதிகளிலும் மழை ஆரம்பிக்கும்.. அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகள், கேரளா, காவிரி நீர்ப்பிடிப்பு, சிறுவாணி நீர்ப்பிடிப்பு, பெரியாறு நீர்ப்பிடிப்பு, பரம்பிக்குளம் நீர்ப்பிடிப்பு, கேரள கடற்கரை மற்றும் மலைத்தொடர்கள், கோவா, மகாராஷ்டிரா கடலோர மற்றும் மலைத்தொடர் பகுதிகள், மும்பை ஆகிய பகுதிகளுக்கு அடுத்த 10 நாட்களுக்குச் சிறந்த நாட்கள் காத்திருக்கின்றன" என்று பதிவிட்டுள்ளார்.
வானிலை மையம்
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த தினசரி செய்திக்குறிப்பில், "இன்றைய தினம் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் மே 26ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று வானிலை மையம் கூறியுள்ளது.
பருவமழை
தமிழகத்திற்கு பொதுவாகத் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என இரு சீசன்களிலும் மழை கிடைக்கும். இதில் தென்மேற்கு பருவமழை காலத்தில் பெரும்பாலும் சென்னைக்கு மழை கிடைக்காது. மாநிலத்தின் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் தான் மழை பெய்யும். அதேநேரம் வடகிழக்கு பருவமழை சமயத்தில் சென்னை உட்பட கடலோர மாவட்டங்கள், வட மாவட்டங்களில் மழை கிடைக்கும்.தென்மேற்கு பருவமழை சீசன் இப்போது தொடங்கியுள்ள நிலையில், இது முடிந்த பிறகே டிசம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications