மழை இருக்கு.. ஆனா சென்னை மக்களே உஷாரா இருங்க! இது கொஞ்சம் டேஞ்சர்.. வெதர்மேன் அலர்ட்
சென்னை: வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக தமிழகத்தில் திடீரென மழைக்கான சூழல் உருவாகியிருக்கிறது. குறிப்பாக மேற்கு மாவட்டங்களிலும், தெற்கு மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார்.
அதே நேரம், சென்னையில் இன்று ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார். காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் வானிலை கொஞ்சம் மந்தமாக இருக்கும். ஆனால், இது கோடை வெயிலை விட ஆபத்தானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக கோடை வெயில் உச்சம் எட்டியிருக்கிறது. ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டலங்களில் வெயில் பட்டையை கிளப்பி வந்த நிலையில், திடீரென இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியிருக்கிறது. பகலில் வெயில், இரவில் மழை என்கிற குழப்பமான வானிலை புதிய தொற்றுகளை உருவாக்கவும் வழிவகுக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
இந்த நிலையில், தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, நாமக்கல், திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும், பெங்களூரிலும் இன்று மழை பெய்யும் எனவும் கூறியிருக்கிறார்.
மேலும், "தமிழகத்தின் உள் மற்றும் தென் மாவட்டங்களிலும் அடுத்த சில நாட்களுக்கு வெப்பம் குறைவாக இருக்கும். கேரளாவின் பெரும்பான்மையான மாவட்டங்களில் இடி மின்னலுடன் நல்ல மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை ஈரப்பதம் அதிகமாக இருக்கும். குறைந்தபட்சமாக 33 டிகிரியும், அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸும் வெயில் பதிவாகியிருக்கும்" என்று தனது x தளத்தில் அவர் பதிவிட்டிருக்கிறார்.
இதில் சென்னை வானிலையை பற்றிய முன்னறிவிப்பு மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது. காரணம் ஈரப்பத்தம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருப்பதுதான். ஈரப்பதம் அதிகமாக இருந்தால், உடலிலிருந்து வியர்வை வெளியேறுவது குறையும். உடலிலிருக்கும் வெப்பம் குறைய வேண்டும் எனில் வியர்வை வெளியேறும். இதனால் வெப்பம் குறைந்து உடல் சமநிலை அடையும். ஆனால், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் வெயில் மந்தமாக தெரியும். வியர்வையும் வெளியேறாது.
ஓகே வானிலை நார்மலாகத்தான் இருக்கிறது என்று நாம் நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால், வெயில் அதிகமாகத்தான் இருக்கும். மறுபுறம் வியர்வை வெளியேறாததால் உடலால் வெப்பத்தை சரியாக வெளியேற்ற முடியாமல் போய்விடும். இது சோர்வு, மயக்கம் அல்லது வெப்ப அழுத்தத்தை ஏற்படுத்தும்.தோல் வறட்சி, மூக்கில் எரிச்சல் அல்லது தொண்டைப்புண் ஆகியவற்றை கூட ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.
ஆக சென்னை மக்களே வெயில் மந்தமாக இருக்கிறது என்று நினைத்து சும்மா இருந்துவிடாதீர்கள். முடிந்தவரை வெயிலில் செல்வதை தவிருங்கள். நீர் ஆகாரத்தை அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள். தண்ணீரை மட்டும் குடிக்காமல் மோர், பழச்சாறு அகியவற்றையும் சேர்த்து எடுத்துக்கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications