காயல்பட்டினத்தை விடுங்க! தூத்துக்குடி டூ ஒட்டபிடாரம் வரை எங்கு அதீத மழை தெரியுமா?.. டேட்டா இதோ!
சென்னை: தென் தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் எங்கெல்லாம் அதீத மழை பதிவாகியுள்ளது தெரியுமா?
தென்கிழக்கு வங்கக் கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.

அது போல் மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள அணைகள், நீர் நிலைகள் நிரம்பியுள்ளது. இதனால் அணைகளிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மேலும் சில கன்மாய்கள், ஓடைகள் உடைந்துவிட்டன. தண்ணீர் வெளியேறும் கால்வாய்களும் சாதாரண மழைக்குத்தான் தண்ணீரை வெளியேற்றும் என்றும் தற்போது பெய்யும் பேய் மழையால் ஏற்படும் வெள்ளத்தை வெளியேற்றும் திறன் அந்த சிறிய கால்வாய்களுக்கு இல்லை என உள்ளூர் மக்கள் குறிப்பிடுகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி, பொள்ளாச்சி, உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஊருக்குள் மழை நீர் வந்துள்ளது. ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் படகுகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். தென்காசியில் நேற்று காலை முதல் 20 மணி நேரமாக மழை பெய்து வருகிறது.
இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 932 மி.மீ. மழை பெய்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: காயல்பட்டினத்தில் மிக அதிக கனமழை பெய்துள்ளது.
இந்த பகுதியில் ஆண்டுக்கு பெய்ய வேண்டிய மழையின் அளவை விட சற்று அதிகமாக மழை பெய்துள்ளது. 1992 ஆம் ஆண்டு மாஞ்சோலையில் உள்ள காக்காச்சி பகுதியில் 965 மி.மீ. மழை பெய்தது. இதன் பிறகு 21 ஆண்டுகள் கழித்து காயல்பட்டினத்தில் கனமழை பெய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் எங்கெல்லாம் அதிக கனமழை பெய்தது என்ற டேட்டாவை பார்க்கலாம். அதன்படி நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மி.மீ.ரில் மழை அளவு
தூத்துக்குடி தாலுக்காவில் தூத்துக்குடியில் 361.40 மி.மீ., ஸ்ரீவைகுண்டத்தில் 618 மி.மீ., திருச்செந்தூர் தாலுக்காவில் திருச்செந்தூரில் 679 மி.மீ. காயல்பட்டினத்தில் 932 மி.மீ. குலசேகரபட்டினத்தில் 326 மி.மீ. மழையும் சாத்தான்குளம் தாலுக்காவில் சாத்தான்குளத்தில் 466 மி.மீ., கோவில்பட்டி தாலுக்காவில் கோவில்பட்டியில் 495 மி.மீ, கழுகுமலையில் 124 மி.மீ., கயத்தாறு தாலுக்காவில் கயத்தாற்றில் 263 மி.மீ., கடம்பூரில் 348 மி.மீ. பெய்துள்ளது.
அது போல் எட்டயபுரம் தாலுக்காவில் எட்டயபுரத்தில் 159.70 மி.மீ. மழை, விளாத்திகுளம் தாலுக்காவில் விளாத்திக்குளத்தில் 238 மி.மீ. மழையும் கடல்குடியில் 110. மி.மீ. மழையும், வைப்பாறில் 202 மி.மீ மழையும். சூரன்குடியில் 155 மி.மீ., ஒட்டப்பிடாரம் தாலுக்காவில் ஒட்டபிடாரத்தில் 356 மி.மீ., மணியாச்சியில் 240 மி.மீ., வேதாநத்தத்தில் 267 மி.மீ. மழையும் கீழரசடியில் 344 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
இவற்றில் கழுகுமலை, எட்டயபுரம், வைப்பார், சூரங்குடியில் மிக கனமழையும் கடல்குடியில் கனமழையும் பெய்துள்ளது. ஏனைய இடங்களில் மிக அதிக கனமழை பெய்துள்ளது. நேற்று ஒரே நாளில் அதாவது 24 மணி நேரத்தில் சராசரியாக 351.79 மி.மீ. மழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications