தமிழகம் முழுக்க 26 மாவட்டங்களில் அடித்து கொட்டப் போகுது மழை.. அடுத்த 2 மணி நேரத்துக்கு விடாது! அலர்ட்
சென்னை: தமிழகத்தில் நேற்று புதுக்கோட்டை உள்பட பரவலாக மழை பெய்த நிலையில் இன்றும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. மதியம் நேரத்தில் சென்னையிலும் மழை கொட்டியது. இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகம் முழுக்க 26 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், குமரி, தேனி, தென்காசி, கோவை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 26 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

26 மாவட்டங்கள் என்னென்ன?
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணி வரை சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கன்னியாகுமரி, தென்காசி, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், நீலகிரி ஆகிய 26 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்த ஒரு வாரம் எப்படி?
முன்னதாக ஒரு வாரத்திற்கான வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கோவை மற்றும் நீலகிரியில் இடி மின்னலுடன் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோல் தேனி, தென்காசி, நெல்லை, குமரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 10 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாளை 4 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடி, மின்னலுடன் அதி கனமழை கொட்டும்
5 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம். திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 6 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு சான்ஸ்
இன்று ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை திங்கட்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications