குடை அவசியம்.. விடாமல் மழை வெளுக்கும்.. சேலம், தர்மபுரி என 6 மாவட்டங்களுக்கு அலர்ட்.. வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் தமிழகத்தில் திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. அடுத்த ஒரு வாரத்துக்கு மழை தொடரும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இன்றும் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சக்தி புயல்
நேற்று முன் தினம் (05-10-2025), மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய "சக்தி" தீவிர புயல், தெற்கு திசையில் நகர்ந்து நேற்று (06-10-2025) காலை 05.30 மணி அளவில் வலுகுறைந்து புயலாக அதே பகுதிகளில் நிலவியது. இது மேலும் தெற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது.
இது துவாரகாவிலிருந்து (குஜராத்) மேற்கு-தென்மேற்கே சுமார் 940 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது மேலும் கிழக்கு-தென்கிழக்கே மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நகர்ந்து, இன்று 07-10-2025 வலுகுறையக்கூடும்.
இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு
இன்று 07-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை 08-10-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
09-10-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தர்மபுரி. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
12 ஆம் தேதி வரை மழை தான்
10-10-2025: வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
11-10-2025 மற்றும் 12-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று மழைக்கு சான்ஸ்
சென்னையில் இன்று (07-10-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: 07-10-2025 முதல் 10-10-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக்கடல் பகுதிகள்: 07-10-2025 முதல் 10-10-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.
அரபிக்கடல் பகுதிகள்:
07-10-2025: மத்திய மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள் மற்றும் வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், ஏனைய மத்தியமேற்கு வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
08-10-2025 மற்றும் 09-10-2025: மத்தியமேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள் மற்றும் வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications