வியர்த்த வேளச்சேரி.. ஊசலாடும் உயிர்கள்.. ஸ்டாலின் ஐயா, என் புள்ளை முகத்தை காட்டுங்க.. உலுக்கிய கதறல்
சென்னை: சென்னை வேளச்சேரி பகுதியில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.. பள்ளத்தில் சிக்கியிருக்கும் 2 ஊழியர்களை மீட்கும் முயற்சியும் விடாமல் நடந்து கொண்டிருக்கிறது.
சென்னையின் பல பகுதிகளில் வெள்ளநீர் வடியவில்லை.. தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தினால், வீடுகளை விட்டு மக்களால் வெளியே வர முடியாத நிலைமை உள்ளது.. குறிப்பாக, புறநகர்ப்பகுதிகளில் பெரும்பாலான குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இவைகளை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

வேளச்சேரி: இந்நிலையில், 2 நாளைக்கு முன்பு, வேளச்சேரியில் பெட்ரோல் பங்க் அருகே, திடீரென 50 அடிப்பள்ளம் ஏற்பட்டதால், அந்த பள்ளத்தில் அடிக்குமாடி கட்டிடமானது, தரையில் இறங்கிவிட்டது.. கண்டெய்னர் சரிந்து விழுந்துவிட்டதால் இந்த விபத்து நடந்துள்ளதாக சொல்கிறார்கள்..
5 பர்லாங் சாலையில் எரிவாயு நிலையத்தின் அருகே ஒரு தனியார் நிறுவனம் கட்டுமான பணிகளை செய்து வருகிறது.. அப்பார்ட்மென்ட் கட்டுவதற்காக இந்த கட்டுமான வேலை நடந்ததாக சொல்கிறார்கள்.. இதற்காகவே இந்த 50 அடி பள்ளம் தோண்டப்பட்டிருக்கிறது..
ஊழியர்கள்: இந்த பள்ளத்தின் பக்கத்திலேயே, ஊழியர் சரக்கு பெட்டகத்தில் செய்யப்பட்ட தற்காலிக அறை இருந்தது.. புயல் தினத்தன்று காலை பலமான மழை பெய்யும்போது, இந்த அறை திடீரென சரிந்து 50 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது..

அப்போது, மண் சரிந்து, இந்த சரக்கு பெட்டக அறை மீதே விழுந்துள்ளது.. இதற்குள் ஊழியர்கள் சிக்கிவிட்டார்கள்.. இதுகுறித்த தகவல் அறிந்ததுமே தீயணைப்பு படை வீரர்கள், மீட்புப் படையினர் பள்ளத்தில் விழுந்த ஊழியர்களை உடனடியாக மீட்டனர். ஆனாலும், 2 பேரை மட்டும் மீட்க முடியவில்லை. இன்றுடன் 4வது நாளாக மண்ணுக்கடியில் சிக்கியிருக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணி இன்று 4வது நாளும் தொடர்கிறது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்ரமணியன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன், மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளிடம், நடந்து வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.. நீர்முழுகி கருவிகள் மூலமாக தேடும் பணி ஆரம்பமானது.. ஆனால், பலத்த மழை பெய்த நிலையில், தண்ணீர் கலங்கியவாறே காணப்பட்டது..
கட்டிடப்பணிகள்: புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் என்பதால், நீரை உறிஞ்சும்போது, மழைநீர் மேலும் மண்ணில் கலங்கிவிடுவதாக சொல்கிறார்கள். எனவே, 2 ஊழியர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இன்று 4வது நாள் என்பதால், இன்றும் இதே பணி நடக்கிறது..
நேற்றிரவு 11.30 மணியிலிருந்து பம்பிங் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி ஆரம்பமாகி உள்ளது.. மொத்தம் 6 பம்புகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.. 1 நிமிஷத்துக்கு 26 ஆயிரம் லிட்டர் அளவுக்கு, பம்ப் செய்யப்பட்டு வருகிறது. இதில், இதுவரை 11 மீட்டருக்கு தோண்டப்பட்டுள்ள நிலையில், இன்னும் 3 மீட்டர் அளவுக்கு தோண்ட வேண்டியிருக்கிறதாம். மாநகராட்சி உதவியுடன் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. அநேகமாக நாளைக்கு இந்த பணிகள் முடிவடையும் என்கிறார்கள்.
கதறல்கள்: அந்த பள்ளத்தை பார்ப்பதற்காகவே, ஏராளமானோர் அங்கு கூடி வருகின்றனர் என்றாலும், போலீசார் இவர்களை அருகில் செல்ல அனுமதிக்கவில்லை.. எனினும், கூட்டம் கூடிக்கொண்டேயிருக்கிறது.. உள்ளே சிக்கியுள்ளவர்களின் பெற்றோர் கதறி அழுதவாறே உள்ளனர். இதனால் அந்த பகுதியே மிகவும் பரபரப்பாகவும், பதற்றமாகவும், கவலையாகவும் காணப்படுகிறது.
"ஸ்டாலின் ஐயா, என் புள்ளையை எங்க கையில குடுத்துடுங்க.. ஒருமுறையாவது என் புள்ளை முகத்தை பார்த்துடனும்" என்று மண்ணில் புதைந்துள்ள ஊழியர்களின் அம்மாக்களின் கதறல் வேளச்சேரியை நிலைகுலைய வைத்துவருகிறது.












Click it and Unblock the Notifications