உயிரை கையில் பிடித்துக்கொண்டு 2 நாளாக தவிப்பு: ஜேசிபி வாகனங்கள் மூலம் மீட்கப்படும் வேளச்சேரி மக்கள்!
சென்னை: வேளச்சேரியில் இன்னும் வீடுகளைச் சூழ்ந்த மழைநீர் வற்றாத நிலையில், 2 நாட்களாக பரிதவித்து வரும் மக்கள் ஜேசிபி, டிராக்டர் வாகனங்களின் மூலமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.
மிக்ஜாம் புயலால் கனமழை வெளுத்து வாங்கி ஓய்ந்த நிலையிலும், வீடுகளைச் சூழ்ந்த மழைநீர் இன்னும் அகலவில்லை. சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம், மற்றும் புற்நகர் பகுதிகளான மேற்கு தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் நேற்று ஆந்திர மாநிலம், பாபட்லா அருகே 110 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது. சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை, வெள்ளம் ஓய்ந்தாலும் கூட சில பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியாததால் மக்கள் முடங்கியுள்ளனர். சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை உட்பட பல பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியாத நிலை உள்ளது.
சென்னை வேளச்சேரியில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தனியார் படகுகள் மூலம் மக்கள் வெளியேறி வருகின்றனர். குடிதண்ணீர், பால், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் மின்சாரம், செல்போன் சேவை இன்னும் கிடைக்கவில்லை. ஒருசில பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
வேளச்சேரி பகுதியில் பலரது கார்களும், பைக்குகளும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டன. இந்நிலையில், சென்னை திருவான்மியூர், தரமணி, துரைப்பாக்கம், பெருங்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஐடி ஊழியர்கள் இன்றைக்கு ஜேசிபி இயந்திரங்களில் தொற்றிக் கொண்டு பணிக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
சென்னை வேளச்சேரியின் உட்புறப் பகுதிகளில், ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இன்னும் மழைநீர் வடியாமல் இடுப்பளவுக்கு மேல் உள்ள நிலையில், வயதானவர்கள், குழந்தைகளை வைத்திருப்பவர்கள், வெளியே வர முடியாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். படகுகளும் போதிய அளவில் இல்லாததன் காரணமாக, பலரால் வெளியேற முடியவில்லை.
இந்நிலையில், ஜேசிபி வாகனங்கள் மூலமாக, பெண்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். வேளச்சேரியில் வெள்ளம் சூழ்ந்ததால், விடுதில் வசித்த பெண்கள் ஏராளமானோர், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்ட நிலையில், இன்று அவர்கள் ஜேசிபி வாகனம் மூலமாக மீட்கப்பட்டுள்ளனர். சிறிய வாகனங்கள் தண்ணீரில் செல்ல முடியாத நிலையில், ஜேசிபி பக்கெட்டில் பெண்கள் நிற்க வைக்கப்பட்டு, அங்கிருந்து மீட்கப்பட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications