வெள்ள பாதிப்பு.. உள்நோக்கத்துடன் விமர்சிக்கிறாங்க.. எங்களுக்கு கவலை இல்லை.. மா சுப்பிரமணியன் காட்டம்
சென்னை: விமர்சனங்கள் என்பது உண்மையான விமர்சனங்களாக இருந்தால் அதை ஏற்று அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வேண்டுமென்றே செய்யப்படும் விமர்சனங்களை பற்றி எனக்கு கவலை இல்லை என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புயல் கரையை கடந்து 4 நாட்கள் ஆகியும் இன்னும் ஒருசில இடங்களில் வெள்ளநீர் வடியவில்லை. மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து அரசு நிவாரண பணிகளை செய்து வருகிறது. அந்த வகையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூபெல்லா தடுப்பூசி: ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் தடுப்பூசி இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மழை வெள்ளம் பாதித்த பகுதிகளான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 9 மாதம் தொடங்கி 15 வயதுக்கு உட்பட்டவர்கள் ரூபெல்லா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். இது அவசியம். இதனை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மொத்தம் 300 நடமாடும் மருத்துவ வாகனங்கள் அனுப்பப்பட்டது. இதில் சென்னைக்கு மட்டும் 160 வாகனங்கள் அனுப்பப்பட்டது. அந்த வாகனங்கள் கூட சுற்றிக்கொண்டே இருக்கிறது. இன்றைக்கு கூட சுமார் 500 வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் மட்டும் 679 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் எந்தவகையிலும், ஒருவருக்கு கூட எந்தவிட நோய் பாதிப்பு இருக்காத வகையிலும், இருந்தால் அவற்றை கண்டறிய வகையிலும் என்று தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
10 ஆயிரம் குடும்பங்களுக்கு: முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதல் படி அரசு மட்டுமின்றி திமுக கழகத்தின் சார்பிலும் சைதாப்பேட்டை பகுதியில் பால் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்டு 10 ஆயிரம் லிட்டர் பால் குடிசை பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஒரு போர்வை, 5 கிலோ அரிசி, தண்ணீர், பிஸ்கட் வழங்கப்பட்டுள்ளது. நேற்றைக்கு மட்டும் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக விநாயகபுரம், நெருப்பு மேடு, கோட்டூர்புரம், பாம்பே குடியிருப்பு, அன்னை சத்யா நகர், சித்ரா நகர் உள்பட பல பகுதிகளுக்கு நேற்று நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை கூட 5000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாளைக்கும் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. 6 வாரங்களில் நடந்த 13,234 மருத்துவ முகாம்களால் 6.50 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
வேண்டுமென்றே விமர்சனம்: ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு செல்போனை வைத்துக்கொண்டு எங்கேயாவது எதனையாவது பேச வைத்துவிட்டு அதனை வீடியோவாக எடுத்துக்கொண்டு அதனை டெவலப் செய்து இணையத்தில் பரப்பி விடுகின்றனர். அதை பற்றி எனக்கு கவலையில்லை. விமர்சனங்கள் என்பது உண்மையான விமர்சனங்களாக இருந்தால் அதை ஏற்று அதனை நிவர்த்தி செய்வதற்குநடவடிக்கை எடுக்கப்படும். வேண்டுமென்றே செய்யப்படும் விமர்சனங்களை பற்றி எனக்கு கவலை இல்லை.
அவர்களுக்கு மீண்டும் மீண்டும் ஒன்றை சொல்லிக்கொள்கிறோம். வேண்டும் என்றே விமர்சனம் செய்யும் எந்த நபராக இருந்தாலும், தெருவில் இறங்கி வந்து துயரில் இருக்கும் தோழரின் ஒரு சொட்டு கண்ணீரை துடைத்துவிட்டு விமர்சனத்தில் இறங்கினால் சந்தோஷமாக விமர்சனத்தை ஏற்கிறோம். அந்த விமர்சனத்தை ஏற்றுக்கொள்வோம்.. இவ்வாறு அமைச்சர் மா சுப்பிரமணிய கூறினார்.












Click it and Unblock the Notifications