தஞ்சை தரணிக்கோர் நற்செய்தி.. கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் வெளுத்தெடுக்கிறது பெரும் மழை!
பெங்களூர்: கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்க்கிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து கிருஷ்ணராஜ சாகர் அணை நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. கர்நாடகாவின் பெங்களூர் உள்ளிட்ட பல இடங்களில் 2 நாட்களாக கோடை மழை வெளுத்தெடுத்துக் கொண்டிருக்கிறது.

காவிரி ஆற்றுக்கான நீர் பிடிப்புப் பகுதிகளான குடகு, மைசூர், மண்டியா உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை வெளுத்துக் கொண்டிருக்கிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அடுத்த 3 நாட்களுக்கும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் கிருஷ்ணராஜ சாகர் அணை நீர் மட்டும் அதிகரிக்கக் கூடும்.
தமிழ்நாட்டில் ஜூன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி நதிநீர் டெல்டா பாசனத்துக்காக திறக்கப்படுவது வழக்கம். தமிழ்நாட்டின் மேட்டூர் அணையில் 18 டிஎம்சி நீர் அளவுதான் உள்ளது. குடிநீர் தேவைக்காக 1500 கன அடிநீர் திறக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி முதல் தமிழ்நாட்டுக்கு 8.548 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்திருக்க வேண்டும். ஆனால் வெறும் 2.496 டிஎம்சி நீரைத்தான் கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இது தொடர்பாக காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் தமிழ்நாடு அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனாலும் கர்நாடகாவோ தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறக்க மறுத்து வருகிறது. அண்மையில் தமிழ்நாட்டுக்கு 2.5 டிஎம்சி நீரை திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையமானது கர்நாடகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
தற்போது கர்நாடகாவில் குறிப்பாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் காவிரி நீர் திறக்கப்படும் கிருஷ்ணராஜ சாகர் அணை நீர்மட்டமும் உயருகிறது. இதனையடுத்து தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை கர்நாடகா திறக்கும்; டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படும் என்கிற நம்பிக்கையோடு தமிழ்நாட்டு விவசாயிகள் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications