ஊட்டி பர்லியார் நிலச்சரிவில் சிக்கி பஸ் டிரைவர் பலி! நடந்தது என்ன? உயிர் தப்பிய நடத்துநர் பேட்டி
ஊட்டி: ஊட்டியை அடுத்த பர்லியார் பகுதியில் மண்சரிவில் சிக்கி அரசு பேருந்து ஓட்டுநர் பலியான நிலையில் நடந்தது என்ன என்பது குறித்து அந்த விபத்தில் இருந்து தப்பிய கன்டக்டர் தகவல்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கன்டக்டர் கேசவன் கூறியிருப்பதாவது: "ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வந்து கொண்டிருந்தோம். அப்போது திடீரென மரம் முறிந்து விழுந்தது.

இதனால் எங்கள் பேருந்தில் இருந்த 7 பயணிகளையும் மாற்று பேருந்தில் அனுப்பிவிட்டு நானும் டிரைவர் ஜனகராஜும் மட்டும் பேருந்தில் இருந்தோம். அப்போது எங்களையும் மாற்று பாதையில் செல்ல சொன்னார்கள். அப்போது மழை அதிகமாக வந்ததால் மழை நின்றவுடன் செல்லலாம் என நினைத்து பேருந்திலேயே இருந்தோம்.
அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு பேருந்து அதில் சிக்கியது. இதையடுத்து மீட்பு படையினர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட போது என்னை உயிருடன் மீட்டனர். ஆனால் ஓட்டுநர் இறந்துவிட்டார். அது போல் கோழிகளை ஏற்றி வந்த லாரியும் அந்த நிலச்சரிவில் சிக்கியது. ஆனால் அதன் டிரைவர் எகிறி குதித்து தப்பிவிட்டார்" என கேசவன் தெரிவித்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கும் தென் மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு முதலே ஊட்டி, மேட்டுப்பாளையம், குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இதனால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
பர்லியாரில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 25 செ.மீ. மழை பெய்துள்ளது. உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்து நிலச்சரிவில் சிக்கியது. இதில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ளவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மாற்று பாதையாக கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் பொதுமக்கள் பயணிக்கலாம் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலையில் 3 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் நெடுஞ்சாலை துறையினர், தீயணைப்பு துறையினர் சாலையில் ஏறப்பட்டுள்ள பாதிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறைந்த நேரத்தில் பெய்த மிக அதிக கனமழையால் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்ததால் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப் பாதையின் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அது போல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த மழையால் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி கோத்தகிரியில் 200 மி.மீ. மழையும், எடப்பள்ளியில் 161 மி.மீ. மழையும் என ஒரே நாள் இரவில் 2152.6 மி.மீ. மழை பெய்துள்ளது.


Click it and Unblock the Notifications
