வரலாற்றிலேயே அரிதாக நடக்கும் நிகழ்வு! தென் மாவட்டங்கள் நீரில் மூழ்கியது ஏன்? அது என்ன "பிளெய்ன்" மழை
சென்னை: தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே அரிதாக நடக்கும் நிகழ்வு ஒன்று தற்போது தென் தமிழ்நாட்டில் நடந்து உள்ளது. ஒரே நாள் 90 செமீயை தாண்டி மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் பல பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. தாமிரபரணி ஆற்றை ஒட்டிய வடக்கு புறவழிச்சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கழுத்தளவுக்கு சூழ்ந்த மழைநீர் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. வீடுகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, மணிமுத்தாறு அணையில் இருந்து 10,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

திருச்செந்தூரில் பெய்து வரும் கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். மழையுடன் காற்றும் வேகமாக வீசுவதால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளன. நகரம் முழுவதும் உள்ள சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.
நெல்லையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துள்ளது மாவட்ட நிர்வாகம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மையிலாடி - அஞ்சுகிராமம் சாலை, கோழிகோட்டு பொத்தை - தோவாளை சாலை, இறச்சகுளம் - திட்டுவிளை சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. அந்த சாலைகள் வழியே போக்குவரத்து முடக்கம் அடைந்துள்ளது.
தூத்துக்குடி, நெல்லையில் வீடுகளுக்குள் வெள்ளம் சென்றுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவிலில் கனமழை பெய்துவரும் நிலையில் ஊட்டுவாழ்மடம், பாறைக்கால்மடம் பகுதிகளில் முழங்கால் அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.
மேலடுக்கு சுழற்சி: குமரிக்கடல் பக்கத்திலேயே மேலடுக்கு சுழற்சி மெதுவாக நகர்ந்து வருகிறது. இதனால் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை இதனால் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93.2 செ.மீ அதிகனமழை பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டின் வரலாற்றில் 24 மணி நேரத்தில் பெய்த 2வது அதிகபட்ச மழைப்பொழிவாக இது பதிவாகியுள்ளது. இதற்குமுன் 1992ம் ஆண்டு திருநெல்வேலியில் உள்ள காக்காச்சியில் 96.5 செ.மீ மழை பதிவாகி இருந்தது.
அது என்ன "பிளெய்ன்" மழை: இதை பிளெய்ன் மழை என்பார்கள். அதாவது மலை பகுதியில் இல்லாமல் நிலப்பகுதியில் பெய்யும் அதீத மழை. 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93.2 செ.மீ அதிகனமழை பதிவாகி உள்ளது. இது அவர்கள் மாவட்டத்தில் ஒரு வருடத்தில் பெய்யும் மழையாகும். அது ஒரே நாளில் பெய்துள்ளது.
இது போன்ற மழை எல்லாம் மலை பிரதேசத்தில்தான் பெய்யும். ஆனால் இந்த முறை சாதாரண சமதள பகுதியான தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பெய்துள்ளது. குமரிக்கடல் பக்கத்திலேயே மேலடுக்கு சுழற்சி மெதுவாக நகர்ந்து வருகிறது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மேலே இருக்கும் மழை மேகங்கள் இதில் பதிவாகி உள்ளன.
இந்த மேகங்கள் தொடர்ந்து அங்கேயே சுழலும். இதனால்தான் தற்போது தென் மாவட்டங்கள் மழை, வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதனால் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரும் செவ்வாய் கிழமை வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications