சென்னை வெள்ள நிவாரணம் ரூ. 6000.. ரேஷன் கடைக்கு பணம் வாங்க போறீங்களா? முதல்ல இதை கவனிங்க!
சென்னை: தமிழ்நாட்டில் 17ம் தேதியில் இருந்து சென்னை வெள்ள நிவாரண தொகை வழங்கப்படும் நிலையில் இதற்கான ஏற்பாடுகள் எப்படி செய்யப்பட்டு உள்ளன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. சமீபத்தில் முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

நிவாரண தொகை அறிவிப்பு இதனடிப்படையில், மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரண தொகை வழங்கும் பணியை வரும் 17ம் தேதி முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்க உள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 இலட்சத்திலிருந்து, 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும்: சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை, ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும்:
டோக்கன்: சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று முதல் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. டோக்கன் எப்படி வழங்கப்படும் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. வீடு வீடாக மாநகரட்சி அதிகாரிகள் டோக்கன்களை வழங்குவார்கள். ரேஷன் கடை அடிப்படையில் டோக்கன் வழங்கப்படும்.
அதன்பின் 10 நாட்களுக்குள் நிவாரணத் தொகை வழங்கப்படும். டோக்கனில் எந்த தேதியில் ரேஷன் கடைக்கு வர வேண்டும் , எந்த நேரத்திற்கு வர வேண்டும், எந்த ரேஷன் கடைக்கு வர வேண்டும் என்பது போன்ற விவரங்கள் இருக்கும். கடையின் பெயர், குடும்ப அட்டைதாரர் பெயர் ஆகியவை இடம்பெற்று இருக்கும்.
ஏற்பாடுகள் எப்படி: தமிழ்நாட்டில் 17ம் தேதியில் இருந்து சென்னை வெள்ள நிவாரண தொகை வழங்கப்படும் நிலையில் இதற்கான ஏற்பாடுகள் எப்படி செய்யப்பட்டு உள்ளன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
1. நேரடியாக ரேஷன் கடைகளில் சென்று மக்கள் பணம் வாங்க வேண்டும் என்பதால் அங்கே மக்கள் வசதியாக நிற்க சாமியானா பந்தல் போடப்பட்டு உள்ளது.
2. கூட்டம் அதிகமாக இருப்பதை தவிர்க்கவே.. டோக்கன் வழங்கப்படுகிறது. ஆனால் அதையும் மீறி கூட்டம் அதிகமாக வரும் என்பதால்.. பேரிகேட் போடப்பட்டு உள்ளது.
3. அங்கேயே குழப்பங்களை தீர்க்க கூடுதலாக ஒரு அதிகாரி இருப்பார். அவரிடம் உங்கள் குழப்பங்களை கேட்க முடியும்.
4. டோக்கனை வழங்கியதும் அதை சரி பார்த்து உடனே பணம் கொடுப்பார்கள். ரேஷன் கார்டுடன் ஒப்பிட்டு உடனே பணம் கொடுப்பார்கள்.

5. மொத்தம் 12 தாள்களை கொடுப்பார்கள். ஒரு கார்டுக்கு 6000 ரூபாய். 500 ரூபாய் நோட்டுகளாக 12 நோட்டுகள் கொடுப்பார்கள்.
நிவாரண நிதியை ரொக்கமாக தருவது ஏன்?: நிறைய ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லை, பெரும்பாலான ஏடிஎம்கள் வேலை செய்யவில்லை என்று புகார்கள் வந்த வண்ணம் உள்ளன, எனவே ரொக்கமாக வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதேபோல் வங்கி கணக்கில் கொடுத்தால் அதற்கான விவரங்களை பெற வேண்டும். ஓடிபி மூலம் சரிபார்க்க வேண்டும்,. நிறைய ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லை என்பதால் புதிதாக உருவாக்க வேண்டும். அதோடு இல்லாமல்.. வங்கியில் பணம் போட்டால் மினிமம் பேலன்ஸ் என்று பணம் எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த மினிமம் பேலன்ஸ் பிரச்னையை சரி செய்ய வேண்டும் என்பதற்காகவே நேரடியாக கைகளில் பணம் கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications