ஆரம்பிக்கும் கனமழை.. இன்று தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முக்கிய தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இன்றைய தினமும் கூட சென்னை, செங்கல்பட்டு உட்பட 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் மழை தொடர்ந்து வரும் சூழலில், எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
தமிழகத்தில் இப்போது தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்து, வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை கொட்டி வருகிறது. குறிப்பாக சென்னை உட்பட வடக்கு மாவட்டங்களில் மெல்ல மழை ஆரம்பித்துள்ளது. நாள் முழுக்க கூட ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது.

கனமழை பெய்யும் என்பதால் பல மாவட்டங்களுக்கு மழை அளவைப் பொறுத்து ரெட், ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் கூட விடுக்கப்படுகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களுக்கும் கூட விடுமுறைகள் விடுக்கப்படுகிறது. நேற்றைய தினம் கூட கனமழை காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அது அப்படியே நகர்ந்து செல்லக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழையின் தீவிரம் குறைய ஆரம்பித்துள்ளது.
இன்றைய தினம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் அந்த நான்கு மாவட்டங்களுக்கு மட்டுமே மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறாமல் கரையைக் கடக்கும் என்பதால் மழையும் கூட மெல்லக் குறையும்.
இதன் காரணமாக நேற்று பல்வேறு மாவட்டங்களிலும் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த சூழலில், இன்று ஒரு மாவட்டத்தில் மட்டுமே இதுவரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தரப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் மட்டும் மழையின் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு இன்று (அக்டோபர் 23) (வியாழக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக அடுத்த மாதம் 15ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இயங்கும் என்றும் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பெரும்பாலும் வேறு எங்கும் மழை இல்லாததால் கூடுதலாக எந்தவொரு மாவட்டத்திலும் விடுமுறை அளிக்கப்படவில்லை. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் இருக்கும் போதிலும், பள்ளி & கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications