வானிலை ஆய்வாளர்களை குழப்பிய.. பெங்கல் புயல்.. அந்த 2 கிமீ வேகம்தான் பிரச்சனையே.. என்ன நடக்குது?
சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் புயலாக மாறவில்லை.
இந்த தாழ்வு மையம் நேற்று புயலாக மாறி இருக்க வேண்டும். ஆனால் புயலாக மாறவில்லை. இன்று புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றும் புயலாக மாறுமா என்பது சந்தேகம்தான். இந்த தாழ்வு மையம் கடுமையாக போக்கு காட்டி வருகிறது.

சென்னையில் இருந்து 480 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இதில் சிக்கல் என்னவென்றால் இந்த தாழ்வு மையம் சமயங்களில் நகராமல் உள்ளது. உதாரணமாக காலை 3 மணிக்கு பிறகு தாழ்வு மையம் நகரவே இல்லை. கடந்த சில மணி நேரங்களாக நகராமல் இருந்த நிலையில் தற்போது மணிக்கு 2 கி.மீ வேகத்தில் மிகவும் மெதுவாக நகர தொடங்கியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
புயல் உருவாவது எப்படி?; பொதுவாக ஒரு சுழற்சி கடலுக்கு மேலே இருக்க வேண்டும். இது வெப்ப நிலை காரணமாக வலிமை அடைந்து தாழ்வு மண்டலமாக மாறும். இந்த தாழ்வு மண்டலம் வலிமை அடைந்து புயல் ஏற்பட கடலின் மேல் வெப்பநிலை 26 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்க வேண்டும். அதாவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படுகிறதே, அதன் மையத்தில் இந்த வெப்பநிலைக்கு மேல் இருக்க வேண்டும்.
அல்லது காற்றழுத்த தாழ்வு பகுதியின் மையத்தில் இதை விட அதிக வெப்பநிலை இருக்க வேண்டும். அந்த வெப்பநிலை இருந்தால் மட்டுமே புயலுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். தற்போது மழைக்காலம் என்றாலும் கூட.. இந்த சூழ்நிலை சரியாக உள்ளது. அதேபோல் கடலுக்கு நடுவே.. நிலத்தில் இருந்து இன்னும் நீண்ட தூரத்தில் இருந்தால் கண்டிப்பாக இது புயலாக மாறும். எவ்வளவுக்கு எவ்வளவு பூமியில் இருந்து தூரத்தில் இருக்கிறதோ அவ்வளவு நல்லது. அப்போதுதான் அது முழுதாக உருவாக முடியும்.
ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் பூமிக்கு அருகில் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுவோம். இது முழுமையாக உருவாகும் முன் அது கரையை கடக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் பல தாழ்வு மண்டலங்கள் புயலாக மாறாமல் போய் இருக்கின்றன.அதேபோல் இன்னொரு விஷயம் வறண்ட காற்று. இந்த வறண்ட காற்று பொதுவாக தாழ்வு மண்டலம் உருவாக விடாமல் தடுக்கும். வறண்ட காற்று காரணமாக தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை இழக்கும். குளிர்ந்த காற்று இருந்தால் தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை அடையும்.
வறண்ட காற்று என்பது தாழ்வு மண்டலத்தை செயல் இழக்க செய்யும், ஆக்ரோஷத்தை குறைக்கும் ஒன்றாகும். இப்போது மழைக்காலம் என்பதால் கடந்த வாரம் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வந்த குளிர்ந்த காற்று புயலுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கிவிட்டது. ஆனால் தாழ்வு மண்டலம் பெரிதாக நகராமல் உள்ளது. இப்படி தாழ்வு மண்டலம் நகராமல் இருப்பதே புயல் உருவாவதில் தாமதத்தை ஏற்படுத்தி உள்ளது
இந்த விஷயங்கள்தான் பொதுவாக ஒரு புயல் உருவாவதற்கான சூழ்நிலையை தீர்மானிக்கும். இந்த விஷயங்கள் சாதகமாக அமைந்தால் புயல் உருவாவதற்கான ஏற்ற சூழ்நிலைகள் இருக்கும்.












Click it and Unblock the Notifications