சென்னை டூ கன்னியாகுமரி.. அடுத்த 1 மணி நேரத்திற்கு மழைக்கான மஞ்சள் அலர்ட்! வானிலை மையம் வார்னிங்
சென்னை: தமிழகத்தில் கோடை மழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த 1 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வழக்கமாக தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில்தான் கோடை வெயில் தொடங்கும். ஆனால், கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பிப்ரவரி இறுதியில் வெயில் தொடங்கிவிட்டது. மார்ச்சில் ஏற்றம் கண்ட வெயில், ஏப்ரலில் உச்சத்தை தொட்டது. தமிழகத்தின் பரவலான மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியிருந்தது.

குறிப்பாக ஈரோடு, கோவை, கரூர் என கொங்கு மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், வேலூர், திருப்பத்தூர், திருத்தணி என வட மாவட்டங்களில் வெயில் 105 டிகிரிக்கு அதிகமாக பதிவாகியிருந்தது. இப்படி இருக்கையில் தற்போது கோடை மழை தொடங்கியிருக்கிறது. ஆரம்பத்தில் தென் மாவட்டங்களில் தலையை காட்டிய மழை, கொஞ்சம் கொஞ்சமாக வட மாவட்டங்களை நோக்கி ஏற தொடங்கியது.
100 டிகிரியை தாண்டி வெயில் பதிவான பகுதிகளில் மழை புரட்டி எடுத்தது. ஏற்காடு, ஈரோடு, வேலூர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த மழை தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. எனவே தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், அடுத்த 1 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது,
சென்னை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி
கடலூர்
தென்காசி
திருநெல்வேலி
கன்னியாகுமரிக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக நேற்று வெளியிடப்பட்டிருந்த வானிலை அறிவிப்பில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications