நிலக்கரி பற்றாக்குறை- மின்வெட்டு அபாயம் வருமா? கடும் பாதிப்பை எதிர்கொள்ளும் மாநிலங்கள்!
சென்னை: நாடு முழுவதும் அனல்மின் நிலையங்களுக்கான நிலக்கரி பற்றாக்குறை உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் நாடு முழுவதும் மின்சார உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து பல மாநிலங்களும் பல மணிநேர மின்வெட்டை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளன.
நிலக்கரி பற்றாக்குறைக்கான காரணங்களும் விளைவுகளும்
- கொரோனா பாதிப்புக்குப் பின் பொருளாதார மீட்சியை நோக்கி பெரும்பாலான துறைகள் இயங்க தொடங்கிவிட்டன. உற்பத்தி துறை உள்ளிட்ட பல தொழில் துறைகள் முழு வீச்சில் செயல்பட்டு வருவதால் நாட்டில் மின்சார தேவை அதிகரித்துள்ளது.

- குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி மற்றும் தமிழகத்தில் கனமழை காரணமாக கையிருப்பில் உள்ள நிலக்கரி விநியோகம் குறைந்து போனது.
- சர்வதேச சந்தையில் நிலக்கரியின் விலை அதிகரித்ததால் நிலக்கரி இறக்குமதியானது 40% குறைந்து போய்விட்டது.
- கடந்த மார்ச் மாதம் சர்வதேச சந்தையில் 1 டன் நிலக்கரி விலை 60 டாலராக இருந்தது. ஆனால் செப்டம்பர்- அக்டோபரில் 1 டன் நிலக்கரி விலை 160 டாலடராக உயர்ந்திருப்பது நிலைமையை மோசமாக்கி உள்ளது.
- எரிவாயு விலை அதிகரித்திருப்பதால் எரிவாயு மூலமான மின்உற்பத்தி குறைந்துள்ளது.
- அணுமின் நிலையங்கள் பராமரிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக மூடப்பட்டதால் மின் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. அதனால் நிலக்கரி மூலமான மின் உற்பத்தியின் தேவை அதிகரித்துள்ளது.
- நிலக்கரி பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் மொத்தம் 135 அனல்மின் நிலையங்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளன.
- நாட்டின் 16 அனல்மின்நிலையங்களில் நிலக்கரி கையிருப்பில் இல்லை; 45 அனல்மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு ஓரிருநாட்களுக்கு மட்டுமே இருக்கிறது.
நிலக்கரி தட்டுப்பாடும் மின்உற்பத்தி பாதிப்பும்
- மத்திய மின்சார ஆணையம் கடந்த 7-ந் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, 16 அனல்மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு கிடையாது. இந்த 16 அனல்மின் நிலையங்கள் மூலமாக 16,880 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
- 30-க்கும் மேற்பட்ட அனல்மின்நிலையங்களில் கையிருப்பு ஒரே ஒருநாள் இருக்கிறது. இந்த 30 அனல்மின் நிலையங்கள் மூலம் செய்யப்பட்டு வந்த மின் உற்பத்தி 37,345 மெகாவாட்.
- 18 அனல் மின்நிலையங்களில் 2 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு. இந்த அனல்மின் நிலையங்களில் மொத்தம் 23.450 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
மத்திய அரசு சொல்வதும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும்
- நாட்டின் 80% அனல்மின்நிலையங்கள் நிலக்கரி பற்றாக்குறையை எதிர்கொண்டிருக்கிறது என்கிறது மத்திய அரசு.
- தற்போதைய நிலக்கரி கையிருப்பு சில நாட்களுக்கு மட்டுமே இருக்கும் என்கிறது மத்திய அரசு
- கனமழையும், சர்வதேச சந்தையின் நிலக்கரியின் விலை உயர்வும்தான் நிலக்கரி விநியோகத்தில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது; 3 நாட்களில் இது சீரமைக்கப்படும் என மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
- நிலக்கரி பற்றாக்குறையை முன்வைத்து மின்வெட்டு குறித்து தேவையற்ற பீதியை உருவாக்கக் கூடாது என மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் எச்சரித்துள்ளார்.
- நிலக்கரி பற்றாக்குறை, மின்வெட்டு அபாயம் குறித்து மத்திய அமைச்சர்கள் ஆர்.கே.சிங், பிரகலாத் ஜோஷி ஆகியோருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா சுமார் 4 மணிநேரம் நேற்று ஆலோசனை நடத்தினார்.
- நிலக்கரி தட்டுப்பாடு குறித்து பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
மின்வெட்டு அபாயம்- மாநிலங்களில் என்ன நிலைமை?
- பீகாரில் நிலக்கரி பற்றாக்குறை இருக்கிறது என்பது உண்மைதான். பொதுவாக தேசிய அனல்மின் கழகம் அல்லது தனியாரிடம் இருந்து நிலக்கரி பெறுவது வழக்கம். தற்போது அது பாதிக்கப்பட்டிருக்கிறது- பீகார் முதல்வர் நிதிஷ்குமார்
- கேரளாவில் அக்டோபர் 19-ந் தேதிக்குப் பின்னர் மின்வெட்டு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது 100 மெகாவாட் மின்சார பற்றாக்குறை நிலவுகிறது; இதனை சரிசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன- கேரளா அமைச்சர் கே.கிருஷ்ணகுட்டி
- டெல்லியில் மின்தட்டுப்பாடு அபாயம் உருவாகி உள்ளது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் அனுப்பியுள்ளார். டெல்லிக்கு மின்சாரத்தை விநியோகிக்கும் டாடா பவர் நிறுவனம், நிலக்கரி கையிருப்பு ஓரிரு நாட்களுக்குதான் இருக்கும்; அதனால் மின்வெட்டு அபாயம் ஏற்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
- தமிழகத்தில் சில நாட்களுக்கு போதுமான நிலக்கரி கையிருப்பு உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இருப்பினும் பராமரிப்பு பணிகளுக்கு தலைநகர் சென்னையில் மின்வெட்டு அமல்படுத்தப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
- பஞ்சாப் மாநிலத்தில் 3 அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் ஒருநாளைக்கு 3 மணிநேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளது.
- கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் பல்வேறு இடங்களில் இன்று முழுவதும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது; எந்தெந்த பகுதிகளில் எப்போது மின்வெட்டு அமலில் இருக்கும் எனவும் விரிவாகவும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- பீகார், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுமார் 14 மணிநேர மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.
- மகாராஷ்டிராவில் 13 அனல்மின் நிலையங்கள் நிலக்கரி பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளன. மேலும் மகாராஷ்டிராவிலும் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.
Recommended Video
- உ.பி.யில் மின்சார பற்றாக்குறையை எதிர்கொள்வது தொடர்பாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இதேபோல் கேரளா முதல்வர் பினராயி விஜயனும் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications