For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டெர்லைட் ஆலை முற்றுகைப் போராட்டம்: வைகோ உள்பட 5000 பேர் கைது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இன்று காலை நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில், வைகோ, நல்லக்கண்ணு, கொளத்தூர் மணி உள்ளிட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டக் குழுவினர் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் உள்ள தாமிர உருக்கு ஆலை நிறுவனமான ஸ்டெர்லைட் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனை மூடக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சமூக ஆர்வலர்கள் பலரும் பல ஆண்டுகளாக போராடிவருகின்றனர். நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு தீர்ப்பினை எதிர்நோக்கியுள்ளது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு ஆலையில் இருந்து வெளியான விஷ வாயு தூத்துக்குடி நகர மக்களுக்கு கண் எரிச்சல், தொண்டை எரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தியது. இதனையடுத்து போராட்டங்கள் தீவிரமடையத் தொடங்கியுள்ளன.

இன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கட்சி பேதமின்றி தலைவர்களும், தொண்டர்களும், மீனவ சமுதாயத்தினரும் வணிகர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மதிமுக மாவட்ட செயலாளர் ஜோயல், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகம்மது அலி உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

பிரம்மாண்டமான இந்த முற்றுகைப் போராட்டத்தில் பேசிய வைகோ கூறியதாவது:

தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலை, நிலம், நிலத்தடி நீர், நிலத்தில் தேங்கும் நீர், காற்று மண்டலம் அனைத்தையும் நஞ்சு மயமாக்கி மனித உயிர்களுக்கும் கால்நடைகளின் உயிர்களுக்கும் ஆபத்து விளைவிக்கிறது

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தூத்துக்குடி அருகே கடலில் இருக்கின்ற இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கடல்வாழ் உயிரினங்கள், ஸ்டெர்லைட் ஆலையால் அழியும் ஆபத்து ஏற்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுவட்டாரத்தில் விவசாய நிலங்கள் பாழ்பட்டுப் போயின. கால்நடைகள் குறிப்பாக, ஆடுகள் ஸ்டெர்லைட் நச்சுத் தண்ணீரைப் பருகி இறந்து போயின.

இங்கு வேலைபார்க்கும் தொழிலாளர்களின் உடல்நலம் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைக்கப்பட்டு வருகிறது. அதோடு 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மக்களின் உடல் நலனுக்கும் தீங்கு ஏற்படுத்தி வருகிறது. குடும்பத்தில் ஒருவர் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். கருவில் உள்ள குழந்தை கூட பாதிக்கப்படுகிறது. எனவேதான் இதனை அகற்றவேண்டும் என்று போராடி வருகிறோம்.

போபால் விசவாயு அழிவைப்போல், தூத்துக்குடி மாநகரத்துக்கும், சுற்றுவட்டாரத்திற்கும் ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்களைக் காப்பாற்ற இந்த ஆலை கண்டிப்பாக அகற்றப்பட்டாக வேண்டும்.

Vaiko leads a protest against Tuticorin Sterlite Factory

ஆலை தொடர்பான வழக்கு தீர்ப்பினை எதிர்நோக்கியுள்ளது. தீர்ப்பு என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஆலையை அகற்றவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எனவேதான் கட்சி பேதமின்றி, சாதி மத பேதமின்றி அனைவரும் இங்கே திரண்டிருக்கிறோம் என்றார்.

இதனையடுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ, நல்லக்கண்ணு, கொளத்தூர் மணி, உள்ளிட்ட தலைவர்களையும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களையும் போலீசார் கைது செய்தனர். அப்போது ஆலை நிர்வாகத்திற்கு எதிராகவும், மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.

தூத்துக்குடியில் கடையடைப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை முற்றுகை போராட்டத்திற்கு ஆதரவாக அந்நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆட்டோ ஓட்டுநர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால், ஆட்டோக்களும் ஓடவில்லை. மீனவ அமைப்புகளும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

செய்தியாளர்கள் மீது தாக்குதல்

இதனிடையே இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப செய்தித் தொலைக்காட்சி சேனல்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் தங்கள் வாகனங்களுடன் அந்த இடத்துக்கு வந்தனர். அவர்களை மாவட்ட எஸ்.பி. ராசேந்திரன் அனுமதிக்க மறுத்ததுடன், அங்கிருந்து அப்புறப்படுத்தினார். புதிய தொலைமுறை சேனலைச் சேர்ந்தவர்களை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ராஜேந்திரன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஏராளமான பத்திரிக்கையாளர்கள் மாவட்ட எஸ்.பி.யைக் கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Vaiko and 5000 persons were arrested after attempting to siege Sterlite factory in Tuticorin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X