முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?
சென்னை: தமிழக அரசியலிலும், உள்கட்டமைப்புத் துறையிலும் இப்போது ஹாட் டாபிக்காக விவாதத்தில் ஓடிக்கொண்டிருப்பது பரந்தூர் புதிய சர்வதேச விமான நிலையத் திட்டம் தான். தேர்தல் மேடைகளில் "விவசாய நிலங்களை அழித்து ஏர்போர்ட் தேவையா?" என்று முழங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று கோட்டையில் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துள்ளார். ஆனால் முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் திட்டத்தை ஒரே கையெழுத்தில் ரத்து செய்துவிட முடியுமா? "முடியாது" என்கிறார்கள் விவரம் தெரிந்த நிபுணர்கள்.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் முதல்வர் விஜய், ஏன் இந்த மெகா திட்டத்தை அவ்வளவு எளிதாகத் தவிர்த்துவிட முடியாது என்பதற்கான 4 மிக முக்கிய காரணங்களை, அதன் பின்புலங்களையும் நாம் விரிவாக பார்ப்போம். தற்போதுள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அதன் உச்சகட்ட கொள்ளளவை நெருங்கிவிட்டது. ஆண்டுக்கு 3 கோடி பயணிகளைக் கையாள்வதே அங்கு குதிரைக்கொம்பாக உள்ளது.

இங்குதான் ஒரு தொழில்நுட்ப சிக்கல் ஒளிந்திருக்கிறது. சென்னை ஏர்போர்ட்டில் இரண்டு ஓடுதளங்கள் இருந்தாலும், அவை ஒன்றைக்கொன்று குறுக்காக அமைந்துள்ளன. சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பான ICAO விதிகளின்படி, குறுக்கு ரன்வேக்களை ஒரே நேரத்தில் இயக்க முடியாது. அதாவது, பாதுகாப்பு காரணங்களால் சென்னை ஏர்போர்ட்டில் ஒரு நேரத்தில் ஒரே ஒரு ஓடுதளத்தை மட்டுமே முழுமையாகப் பயன்படுத்த முடியும்.
அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளில் சென்னைக்கு வரும் விமானங்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயரும் போது, புதிய விமானங்களை இறக்க இங்கு இடமே இருக்காது. புதிய ரன்வே அமைக்க மீனம்பாக்கத்தைச் சுற்றி நிலமும் இல்லை. பரந்தூர் வராவிட்டால், சர்வதேச நிறுவனங்கள் சென்னைக்கு வருவதையே நிறுத்திவிடும் ஆபத்தும் உள்ளது.
1 டிரில்லியன் டாலர்' கனவு
தமிழகத்தை '1 டிரில்லியன் டாலர்' பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கு புதிய முதல்வர் விஜய் அவர்களுக்கும் நிச்சயம் இருக்கும். ஆனால், அதற்கு உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மிக முக்கியம் ஆகும். நமக்கு பக்கத்து மாநிலங்களான கர்நாடகா (பெங்களூரு கெம்பேகவுடா ஏர்போர்ட்) மற்றும் தெலங்கானா (ஐதராபாத் ராஜீவ் காந்தி ஏர்போர்ட்) ஆகியவை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட 'இணையான ஓடுதளங்களுடன்' பிரம்மாண்டமாக விரிவடைந்துவிட்டன.
சென்னையை பொறுத்தவரை ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் பகுதிகளில் உற்பத்தியாகும் மொபைல் போன்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோமொபைல் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப சென்னை ஏர்போர்ட் பற்றாக்குறையாக உள்ளது. பரந்தூர் போன்ற ஒரு மெகா ஏர்போர்ட் இல்லை என்றால், பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் அடுத்தகட்ட கோடிக்கணக்கான முதலீடுகளை பெங்களூருக்கோ அல்லது ஹைதராபாத்திற்கோ மாற்றிவிடும். இது தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பைக் கடுமையாகப் பாதிக்கும் அபாயமும் உள்ளது.
டெல்லி அழுத்தம் மற்றும் சர்வதேச 'செக்'
விமான போக்குவரத்துத் துறை என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரக்கூடியது. மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் ஆகியவை ஏற்கனவே பலகட்ட ஆய்வுகளை நடத்தி, வான்வெளி அனுமதி (Airspace Clearance) வழங்கி, பரந்தூரை இறுதி செய்துள்ளன. ஒரு சர்வதேச மெகா நகரத்திற்கு மாற்று ஏர்போர்ட் கட்டாயம் தேவை என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. இப்போது மாநில அரசு "திட்டம் வேண்டாம்" என்று திடீரென ஒற்றைப்படையாக ரத்து செய்தால், அது மத்திய-மாநில உறவில் பெரிய விரிசலை உண்டாக்கும். அதோடு, தமிழகத்திற்கு வரவேண்டிய மற்ற மத்திய நிதி ஒதுக்கீடுகளிலும் முட்டுக்கட்டை விழ வாய்ப்பு அதிகம் ஆகும்
வீணாகும் மக்கள் பணம் & சட்ட சிக்கல்கள்
பரந்தூர் திட்டத்திற்காக முந்தைய அரசு சும்மா இருந்துவிடவில்லை. வான்வெளி ஆய்வு , மண் பரிசோதனை, ஹைட்ரோ-லாஜிக்கல் சர்வே மற்றும் சர்வதேச நிபுணர் குழுக்கள் மூலம் டெண்டர் ஆவணங்கள் தயாரிப்பது எனப் பல கோடி ரூபாய் மக்கள் பணம் ஏற்கனவே செலவிடப்பட்டுள்ளது. சுமார் 1700 ஏக்கர் நிலம் வரை கையக்கப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, இதற்கான ஆரம்பகட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், திட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டால் நீதிமன்றத்தை நாடும். இதனால் அரசுக்கு பல்லாயிரக்கணக்கான கோடிகள் நஷ்டஈடு தர வேண்டிய சட்டச் சிக்கல்களும் உருவாகும்.
முதலமைச்சர் விஜய் என்னதான் செய்வார்?
அரசியல் மேடைகளில் பேசுவது வேறு; ஆட்சி நாற்காலியில் அமர்ந்து நிர்வாகம் செய்வது வேறு என்பதை முதல்வர் விஜய் நன்றாகவே அறிவார். திட்டத்தை முற்றிலும் ரத்து செய்வது மாநிலத்தின் 50 ஆண்டுகால வளர்ச்சியை முடக்குவதற்குச் சமம். எனவே, அவர் "திட்டத்தை ரத்து செய்யமாட்டார்... மாறாக, அதன் வடிவத்தை மாற்றுவார் என்றகிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
சுருக்கப்பட்ட வடிவமைப்பு
5,700 ஏக்கர் என்ற பரப்பளவை சற்றே குறைத்து, நவீன இன்ஜினியரிங் தொழில்நுட்பங்கள் மூலம் பெரிய நீர்நிலைகளையும், அடர்ந்த விவசாய நிலங்களையும் தவிர்த்து ஏர்போர்ட் மேப் மாற்றி அமைக்கப்படலாம். நிலம் தரும் விவசாயக் குடும்பங்களுக்கு சந்தை விலையை விட பல மடங்கு கூடுதல் இழப்பீடு, மாற்று இடம் மற்றும் ஏர்போர்ட் சார்ந்த பணிகளில் நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கி மக்களைச் சமரசம் செய்யும் பாதையையே புதிய அரசு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். இறுதியாக வளர்ச்சியும் வேண்டும், மக்களின் வாழ்வாதாரமும் வேண்டும் என்ற சமநிலையான அணுகுமுறையை நோக்கித்தான் முதல்வர் விஜய்யின் நிர்வாகம் பயணிக்கும் என்றே நம்புகிறார்கள் அரசியல் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications