வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்
துபாய்: போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் வளைகுடா கடற்பரப்பில், இந்தியா தனக்கான மாற்றுப் பாதையை ஓமன் நாட்டின் வழியே மிகச் சாமர்த்தியமாகக் கண்டறிந்துள்ளது. இந்த 'CEPA' ஒப்பந்தம் என்பது வெறும் இரு நாட்டு வியாபாரம் மட்டுமல்ல, உலக அரங்கில் இந்தியாவின் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு அரணாக அமைந்துள்ள ஒரு ராஜதந்திர நகர்வாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் மற்ற வளைகுடா நாடுகளைப் போலல்லாமல், ஓமன் நாட்டின் பெரும்பாலான கடற்கரைகள் இந்த ஆபத்தான ஹார்முஸ் நீரிணைப்புக்கு வெளியே, நேரடியாக அரபிக்கடல் மற்றும் ஓமன் வளைகுடாவை ஒட்டி அமைந்துள்ளன. வளைகுடாவில் எவ்வளவு பெரிய போர் வெடித்தாலும், ஓமனின் 'சலாலா', 'துக்ம்' துறைமுகங்களுக்கு இந்தியக் கப்பல்கள் எந்த ஆபத்தும் இன்றி சென்று வர முடியும். இந்த பிரச்சனை பற்றி விரிவாக பார்ப்போம்.

உலக அரசியலை பொறுத்தவரை எப்போது, எங்கு, என்ன நடக்கும் என்று கணிக்கவே முடிவதில்லை. இப்போது மத்திய கிழக்கில் அமெரிக்கா - ஈரான் இடையே வெடித்துள்ள போரால் உலகமே நடுங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, சர்வதேசக் கடல் எல்லையான 'ஹார்முஸ் நீர்முணை பகுதியில் எப்போது வேண்டுமானாலும் என்ன நடக்கலாம் என்ற சூழல் நிலவுகிறது. உலகமே கச்சா எண்ணெய்க்காக நம்பியிருக்கும் மிக முக்கியமான கடல் பாதை இது.
ஈரானின் இந்த போர்ப் பதற்றத்தால் சவுதி அரேபியா, கத்தார், யுஏஇ போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, சாமானிய மனிதனின் பட்ஜெட்டைப் பதம் பார்க்கத் தொடங்கியுள்ளது.
மற்ற வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவின் இறக்குமதி 15 பில்லியன் டாலரிலிருந்து 9.8 பில்லியன் டாலராகக் தலைகீழாகச் சரிந்துவிட்டது. இந்தியாவின் ஏற்றுமதியும் பாதியாகக் குறைந்துவிட்டது. ஆனால், இந்த உலகளாவிய நெருக்கடியிலும் இந்தியாவுக்குக் கிடைத்த ஒரு விசித்திரமான மாற்றுப் பாதைதான் ஓமன் நாடு!
கைகொடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க 'CEPA' ஒப்பந்தம்
மற்ற வளைகுடா நாடுகளைப் போலல்லாமல், ஓமன் நாட்டின் பெரும்பாலான கடற்கரைகள் இந்த ஆபத்தான ஹார்முஸ் நீரிணைப்புக்கு வெளியே, நேரடியாக அரபிக்கடல் மற்றும் ஓமன் வளைகுடாவை ஒட்டி அமைந்துள்ளன. வளைகுடாவில் எவ்வளவு பெரிய போர் வெடித்தாலும், ஓமனின் 'சலாலா', 'துக்ம்' துறைமுகங்களுக்கு இந்தியக் கப்பல்கள் எந்த ஆபத்தும் இன்றி சென்று வர முடியும்.
இந்தச் சூழலில்தான், இந்தியாவின் உழைப்புச் சார்ந்த ஏற்றுமதிப் பொருட்களுக்கு 0% வரிச் சலுகை அளிக்கும் இந்தியா - ஓமன் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA) இன்று (ஜூன் 1) முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி மஸ்கட் சென்றிருந்தபோது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சொன்னது போல, இது வெறும் எண்களுக்கான ஒப்பந்தம் அல்ல; நம் நாட்டு மாணவர்கள், கைவினைஞர்கள், பெண்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு, குறு தொழில்களின் வாழ்வாதாரத்திற்கான ஒரு புதிய விடியல்!
இந்தியாவிற்கு ஜாக்பாட்
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஓமன் நாடு தனது 98.08% இறக்குமதிப் பொருட்களுக்கு 0% (பூஜ்ஜியம்) வரிச் சலுகையை இந்தியாவிற்கு வாரி வழங்கியுள்ளது. இதற்கு முன்பு வெறும் 15.3% பொருட்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை இருந்தது.
இதன் மூலம் வியர்வை சிந்தி உழைக்கும் இந்தியாவின் அடித்தட்டுத் தொழிலாளர்களின் கைவண்ணத்தில் உருவாகும் ஜவுளி, தோல் பொருட்கள், காலணிகள், கைவினைப் பொருட்கள், பிளாஸ்டிக், விவசாயப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஆட்டோமொபைல் போன்ற உழைப்புச் சார்ந்த துறைகளுக்கு 100% வரி விலக்கு கிடைக்கும்.
சில இந்தியப் பொருட்களுக்கு ஓமனில் 100% வரை வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், இனி அந்தத் தடைகள் உடைக்கப்படுவதால் ஓமன் சந்தையில் இந்தியப் பொருட்களின் ஆதிக்கம் பல மடங்கு அதிகரிக்கும்.
கடந்த ஓராண்டில் உலக நாடுகள் இந்தியப் பொருட்களை வாங்கத் தயங்கியபோதும், ஓமனுக்கான இந்தியாவின் ஏற்றுமதி பெரிய அளவில் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பதிலுக்கு ஓமனுக்கு என்ன லாபம்?
வர்த்தகம் என்பது இரு தரப்புக்கும் பலன் தருவதுதானே? நமக்கு ஓமன் சலுகைகளை அள்ளி வழங்கியதற்குப் பதிலாக, ஓமனிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் எரிசக்தி, உரங்கள் மற்றும் தொழில்முறை மூலப்பொருட்களுக்கு இந்தியாவும் வரியைக் கணிசமாகக் குறைத்துள்ளது.
கடந்த நிதியாண்டில் ஓமனிடமிருந்து இந்தியா 7.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. இதில் கச்சா எண்ணெய் (1.6 பில்லியன் டாலர்), திரவ இயற்கை எரிவாயு (1.2 பில்லியன் டாலர்), உரங்கள் (843 மில்லியன் டாலர்), மெத்தனால் மற்றும் அம்மோனியா ஆகியவை முதன்மையானவை. இனி இவற்றுக்கான வரிகள் குறைவதால் ஓமன் நாட்டின் வர்த்தகமும் இந்தியாவால் பெரிய அளவில் லாபமடையும்.
போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் சர்வதேசக் கடற்பரப்பில், இந்தியா தனக்கான மாற்றுப் பாதையை ஓமன் நாட்டின் வழியே மிகச் சாமர்த்தியமாகக் கண்டறிந்துள்ளது. இந்த 'CEPA' ஒப்பந்தம் என்பது வெறும் இரு நாட்டு வியாபாரம் மட்டுமல்ல, உலக அரங்கில் இந்தியாவின் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு அரணாக அமைந்துள்ள ஒரு ராஜதந்திர நகர்வு!


Click it and Unblock the Notifications
