ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?
உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக விளங்கும் அமெரிக்கா, தற்போது தீவிரமான நிதிப் பற்றாக்குறை சிக்கலில் சிக்கியுள்ளது. ஜி7 நாடுகளில் (G7) மிகப் பெரிய அளவிலான பட்ஜெட் பற்றாக்குறையை அமெரிக்கா கொண்டுள்ளது. இது அமெரிக்காவின் நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
டிரம்ப் கொண்டு வந்த கொள்கை, போர் முடிவுகள், வரி மூலம் உடைந்த சப்ளை செயின், கச்சா எண்ணெய் விலை, அரசு பத்திர விற்பனை மூலம் டாலர் மதிப்பில் தடுமாற்றம் என பல பிரச்சனைகளால் அமெரிக்காவின் நிதி நிலைமை பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு உள்ளது.

நிதிப் பற்றாக்குறை
நிதி பற்றாக்குறை (Budget Deficit) என்பது ஒரு நாட்டின் வரவு-செலவுத் திட்டத்தில், அரசு ஈட்டும் வருவாயை விட அதனுடைய செலவுகள் அதிகமாக இருக்கும் நிலையைக் குறிக்கும். எளிமையாகச் சொன்னால், "வரவுக்கு மீறிய செலவு". தொடர்ந்து நிதி பற்றாக்குறை இருந்தால் நாட்டின் கடன் சுமை அதிகரிக்கும் மற்றும் பணவீக்கம் அதிகரிக்கவும் ஏற்பட வாய்ப்புள்ளது
ஜி7 நாடுகளில் அமெரிக்கா முதலிடம்
தற்போது அமெரிக்காவின் நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) -6.0 சதவீதமாக உள்ளது. இது ஜி7 நாடுகளில் மிக உயர்ந்த அளவாகும். ஜி7 நாடுகளின் சராசரி பற்றாக்குறை -3.0 சதவீதமாக இருக்கும் நிலையில், அமெரிக்காவின் பற்றாக்குறை அதை விட இரு மடங்கு அதிகமாக உள்ளது.
பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் -5.0 சதவீத பற்றாக்குறையுடன் இரண்டாவது இடத்தில் உள்ளன.
2026-27 நிதியாண்டில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) -4.3% ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டில் -4.4% என்ற அளவீட்டை எட்டியது.
2028-ல் மேலும் மோசம்
2028-ம் ஆண்டுக்குள் அமெரிக்காவின் பற்றாக்குறை -7.5 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2021-ம் ஆண்டுக்குப் பிறகு மிக உயர்ந்த அளவாக இருக்கும். அதே நேரத்தில், இத்தாலி மற்றும் கனடா ஆகிய நாடுகள் -2.0 சதவீத பற்றாக்குறையுடன் மிகக் குறைவான அளவில் இருக்கும்.
பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் -5.0 சதவீதத்துக்குக் கீழ் பற்றாக்குறையை வைத்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நீண்டகால ஆபத்து
அமெரிக்காவின் தற்போதைய நிதிநிலை நீண்டகாலத்துக்கு நிலையானது அல்ல என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அதிக அளவிலான கடன், வட்டிச் செலவு அதிகரிப்பு மற்றும் வருவாய் குறைவு ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், உலகப் பொருளாதாரத்திலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என்பது தான் தற்போதைய பிரச்சனை.
இதை சமாளிக்க அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினால் கட்டாயம் உலகின் மற்ற நாடுகளும் இதை பாலோ செய்யும், அப்படி செய்யும் போது இந்தியாவும் வட்டி விகிதத்தை உயர்த்தியாக வேண்டியிருக்கும்.
இந்தியாவுக்கு என்ன பிரச்சனை?
அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்படும் எந்த மாற்றமும் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியா போன்ற நாடுகள் அமெரிக்காவுடன் அதிகளவில் வர்த்தகம் செய்யும் நிலையில், அங்கு ஏற்படும் நிதி பற்றாக்குறையின் தாக்கம் இந்திய ஏற்றுமதி, முதலீடு மற்றும் ரூபாய் மதிப்பை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. இது தங்கம் விலையில் துவங்கி, டாலர் மதிப்பு மற்றும் பிற முதலீடுகள் என அனைத்தையும் பாதிக்கும்.
அமெரிக்கா இன்னும் வலுவான பொருளாதார அடித்தளத்தைக் கொண்டிருந்தாலும், அதிக கடன் சுமை மற்றும் பற்றாக்குறை நீண்டகாலத்தில் பெரும் சவால்களை ஏற்படுத்தும் என்பது தெளிவாகிறது. இதேபோல் ஈரான் போர் மோசமானாலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications